மயிலாடுதுறை; திருமெய்ஞாசனம் பிரம்மபுரீஸ்வரர் கோவில் தீர்த்த வாரி நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே பிள்ளை பெருமாள் நல்லூர் ஊராட்சியில் உள்ள திருமெய்ஞானத்தில் பிரசித்தி பெற்ற இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து புனித நீரை எடுத்து வந்து தினமும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. இந்த நாளில் கோவில் கிணற்றில் பக்தர்கள் புனித நீராடுவது சிறப்பு. மேலும் இந்த நீர் காசிக்கு இணையான புனித நீராக கருதப்படுகிறது. ஆண்டில் பங்குனி அசுவதி நட்சத்திரத்தன்று மட்டும் பக்தர்கள் இந்த கோவில் கிணற்றில் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் பங்குனி அசுபதி நட்சத்திரத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு முதலில் கோவில் குளத்தில் புனித நீராடினார் பின்னர் புனித கிணற்றில் நீராடினார். இதையொட்டி அம்மல குஜ நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் ஆகிய சாமிகளுக்கு பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து மகா திபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் கிணற்றில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கணேஷ் குருக்கள் கோவில் நிர்வாகிகள் மற்றும் திரளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.