மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் நடந்த ரம்ஜான் தொழுகையில், ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும், அன்பையும் தெரிவித்துக் கொண்டனர்.
மேட்டுப்பாளையத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள, 24 பள்ளிவாசல்களில் இருந்து, இஸ்லாமியர்கள் ஊர்வலமாக, ஊட்டி சாலையில் உள்ள ஈத்கா பள்ளிவாசலுக்கு சென்றனர். அங்கு மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் கலிபுல்லா, ரம்ஜான் சிறப்பு தொழுகையை நிறைவேற்றினார். வேலூர் அரபிக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் அப்துல் ஹமீது ரம்ஜான் தொழுகை குறித்து விளக்கிப் பேசினார். ஈத்கா பள்ளிவாசல் பகுதியில் போதிய இடவசதி இல்லாததால், அருகே இருந்த கட்டடத்தின் மாடியிலும், ஊட்டி சாலையிலும், இஸ்லாமியர்கள் தாங்கள் கொண்டு வந்த விரிப்புகளை விரித்து ரம்ஜான் தொழுகையில் பங்கேற்றனர். தொழுகை முடிந்தவுடன் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி அன்பையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். தொழுகை முடிந்து போக்குவரத்து சீரடைய அரை மணி நேரத்திற்கு மேலானதால், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த வாகனங்கள், அரை மணி நேரம் காத்திருந்தன. அதன் பின்பு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., அதியமான், போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன் ஆகியோர் தலைமையில், நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் நகரில் கண்காணிப்பு, போக்குவரத்து சீரமைத்தல், பாதுகாப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டனர்.