கூடலூர்: கூடலூரில் சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா ரத யாத்திரை ஊர்வலம் சிறப்பாக நடந்தது.
சத்ய சாய்பாபாவின், 100வது பிறந்த நாளை கொண்டாடி, சாய்பாபாவின் உலகளாவிய அன்பு, சேவை குறித்த செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், தமிழகம், கர்நாடகாவில் ரத யாத்திரை நடந்து வருகிறது.
அதன்படி, கர்நாடகா குண்டல்பேட்டையில் ரத யாத்திரை ஊர்வலத்தை நிறைவு செய்த குழுவினர், நேற்று முன்தினம் கூடலுார் வந்தனர்.
நேற்று காலை, ஹெல்த் கேம்ப் சத்ய சாய்பாபா கோவிலிலிருந்து, சிறப்பு பூஜையுடன் ரத ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தில் பக்தர்கள் பஜனை பாடி வந்தனர்.
ஊர்வலம் ஊட்டி – மைசூரு தேசிய நெடுஞ்சாலை, பழைய கோர்ட் சாலை, கோழிக்கோடு சாலை வழியாக சென்று ஜானகி அம்மாள் திருமண மண்டபத்தில் நிறைவு பெற்றது.
அங்கு, சத்திய சாய்பாபா நுாற்றாண்டு விழா சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், பழங்குடி பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.
ஊர்வலத்தில், சாய்பாபா சேவை அமைப்பின் மாநில தலைவர் சுரேஷ், மாநில துணைத் தலைவர், சரவணகுமார், மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன் மற்றும் கூடலுார் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.