பித்ருக்களின் ஆசி கிடைக்கும் மகாளய பட்சம்: தட்சிணாயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசையும், உத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் தை அமாவாசையும் முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இதனிடையே புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது. முன்னோர்கள் பூலோகம் வரும் மகாளய பட்சம் தொடங்கிவிட்டது. செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 21 வரை மகாளய பட்ச காலமாகும். இந்நாட்களில் முன்னோரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
மகாளயபட்சத்தில் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்க பிதுர் உலகத்தில் இருந்து பூலோகம் வருகின்றனர். அவர்களின் வரவை எதிர்பார்த்து உள்ளம், உடல் துாய்மையுடன் நாம் காத்திருக்க வேண்டும். வீட்டையும் சுத்தமாக வைக்க வேண்டும். குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்வது கூடாது. இந்தக் காலத்தில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. ஏனெனில் முன்னோருக்கான திதி, தர்ப்பணம், சிரார்த்தம், தானம், தர்மம் செய்வதில் ஈடுபட வேண்டும் என்பதற்காக. கன்னியாகுமரி, ராமேஸ்வரம், வேதாரண்யம், தனுஷ்கோடி போன்ற கடற்கரை தலங்களுக்கு செல்லலாம். முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை செய்து காகத்திற்கு அன்னமிடலாம். பசுவிற்கு கீரை, பழம் கொடுக்கலாம். இதுவும் முடியாவிட்டால் முன்னோர்களின் பெயரை உச்சரித்து ‘காசி காசி’ என்று செல்லியபடியே, கால் மிதிபடாமல் வீட்டு வாசலில் எள்ளும், தண்ணீர் விட்டாலும் பலன் கிடைக்கும்.
இதில் மகாபரணி மற்றும் மத்யாஷ்டமி தினங்கள் முக்கியமானவை. திதிகள் எது என்று அறியாதவர்கள் இந்த நாள்களில் பித்ரு காரியங்களைச் செய்வது சிறப்பு. நாளை (செப்.12) மகா பரணியும், மத்யாஷ்டமி செப்.14 அன்றும் வருகின்றன. இந்த நாட்களில் செய்யும் பித்ரு காரியங்கள் உரிய ஆத்மாக்களுக்கு சென்றடையும். இந்த நாளில் வீட்டில் தவறாமல் முன்னோர்களை நினைத்து வழிபட அவர்களின் ஆசி கிடைக்கும். இந்நாளில் முன்னோர்களின் பெயரை உச்சரித்தாலும் உயர்வு கிடைக்கும்!