மானாமதுரை; மானாமதுரையில் நவராத்திரியையொட்டி வீடுகள் மற்றும் கோயில்களை அலங்கரிக்க விற்பனைக்கு வந்துள்ள கொலு பொம்மைகளை ஏராளமான மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். மானாமதுரையில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆண்டுதோறும் சீசனிற்கு தகுந்தாற் போல் மண்ணால் ஆன மண்பாண்ட பொருட்களையும் கலைமயமிக்க சுவாமி சிலைகள் நவராத்திரி கொலு பொம்மைகள் சமையல் பொருட்கள் என பல்வேறு விதமான பொருட்களை தயார் செய்துவருகின்றனர்.வருகிற செப்.22 ம் தேதி துவங்க உள்ள நவராத்திரி விழா தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும் போது பெரும்பாலான வீடுகளிலும், கோயில்களிலும் கொலு அமைக்கப்பட்டு சுவாமி சிலைகள், திருப்பதி பிரம்மோற்ஸவ சிலைகள், அத்திவரதர் சிலை, அர்த்தநாரீஸ்வரர், சங்கரநாராயணன், அழகர் சுவாமி, மீனாட்சி சுந்தரரேஸ்வரர், தலைவர்கள், தியாகிகள் சிலைகள், பறவைகள் மற்றும் விலங்கு பொம்மைகள், ஆண்டாள் பொம்மைகள் என பல்வேறு விதமான பொம்மைகள் வைக்கப்பட்டு தினந்தோறும் பூஜைகள் நடைபெற உள்ளது இதற்காக மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தில் ஆயிரக்கணக்கான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வந்து கொலு பொம்மைகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.