புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
மதுராந்தகம் அருகே திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பிரசன்ன வெங்கடேச பெருமாள் காட்சியளித்தார்.
கூவத்துார் அடுத்த, முகையூர் பகுதியில், சுந்தரவல்லி தாயார் சமேத கள்ளழக பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இப்பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதி பக்தர்கள், இதை வடதிருமாலிருஞ்சோலை கோவிலாக கருதி வழிபடுகின்றனர்.
கள்ளழகர், சித்திரை மாத பவுர்ணமி நாளில், பாலாற்றில் இறங்குவது, புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையன்று கருடசேவையாற்றுவது என, முக்கிய உத்சவங்கள் காண்கிறார்.
புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையான நேற்று காலை, கள்ளழகர் சிறப்பு அபிஷேக திருமஞ்சன வழிபாட்டைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவையாற்றி, பக்தி பாடல்கள், மேள, தாள இசையுடன் வீதியுலா சென்றார். புதுச்சேரி சாலை, கிராம வீதிகள் வழியே சென்ற அவரை, பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.
திருப்போரூர் அடுத்த மேட்டுத்தண்டலம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், காலை 10:30 மணிக்கு, விசேஷ திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், மஹா தீபாரதனை நடந்தது.
நெல்லிக்குப்பம் அம்புஜவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில் அதிகாலை, 5:30 மணிக்கு, சிறப்பு பூஜை நடந்தது.
அகரம் கிராமத்தில் பாமா ருக்குமணி சமேதகோபாலகிருஷ்ண பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மானாமதி ஊராட்சியில் அடங்கிய அகரம் வைகுண்ட பெருமாள் கோவில், சிறுதாவூர், திருப்போரூர், கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.