போத்தனூர்: குறிச்சி ஹவுசிங் யூனிட்டிலுள்ள தர்மசாஸ்தா கோயிலுக்கு, சபரிமலை மேல்சாந்தி வருகை தந்தார்.
கேரள மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில், 2025 -–- 26ம் ஆண்டுக்கான மேல்சாந்தியாக பிரசாத் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று இவர் கோவை, குறிச்சி ஹவுசிங் யூனிட்டிலுள்ள தர்மசாஸ்தா கோயிலுக்கு வருகை புரிந்து, தீபாராதனை வழிபாடு செய்தார். முன்னதாக இவருக்கு பூரண கும்ப மரியாதையுடன், செண்டை மேளம் மற்றும் பெண்கள் விளக்கேந்தி வர, வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயில் நிர்வாக குழு தலைவர் ராஜேஷ், செயலாளர் மணிகண்ட பிரபு, ஆலோசகர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தினர். திரளான பக்தர்கள் ஆசிர்வாதம் பெற்றனர். மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கூறுகையில், ‘‘நான் மற்றவர்களை போல ஒரு நிமிடம் மட்டுமே அய்யப்பனை தரிசித்துள்ளேன். தற்போது அவருக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளதை புண்ணியமாக கருதுகிறேன். அய்யப்பன் கோயில் கட்டுவது பெரிதல்ல. பிரார்த்தனையுடன் நல்ல முறையில் அனைத்து காரியங்களையும் மேற்கொள்ள வேண்டும்,’’ என்றார்.