திருப்பரங்குன்றம் மலையில் தொல்லியல் துறையினர் மூன்றரை மணிநேரம் ஆய்வு



திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை மேல் தொல்லியல் துறையினர் மூன்றரை மணிநேரம் ஆய்வு செய்தனர்.


மதுரை மாவட்டம் ஏழுமலை ராம ரவிக்குமார் ஏற்கனவே தாக்கல் செய்த மனு அடிப்படையில் டிச., 1ல் நீதிபதி ஜி‌.ஆர். சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களை தவிர தீப தூணிலும் டிச., 3ல் கார்த்திகை தீபத்தை சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் ஏற்ற வேண்டும். இந்த ஆண்டு முதல் தீப தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்வது போலீசாரின் கடமை என உத்தரவிட்டிருந்தார். அவரது உத்தரவு நிறைவேற்றப்படாததால் கலெக்டர் பிரவீன் குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோயில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராம ரவிக்குமார் மனு தாக்கல் செய்தார். இதை டிச. 3ல் விசாரித்த நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் உச்சிப்பிள்ளையார் கோயிலில் மாலை 6:00 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. பிற மனுதாரர்கள் உள்பட 10 பேரை மனுதாரர் அழைத்துச் செல்லலாம் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை அனுப்ப உயர் நீதிமன்ற சி.ஐ.எஸ்.எப்., கமாண்டன்டிற்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே. கே. ராமகிருஷ்ணன் அமர்வு டிச., 4ல் தள்ளுபடி செய்தது.


இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டிச., 4ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதன் கார்த்திகை தீபத்தை தீபத்தூணில் ஏற்ற வேண்டும் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார். பின்பு டிச. 9ல் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் விசாரித்து, தமிழக அரசின் தலைமைச் செயலர், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டிச., 17 மதியம் 3:00 மணிக்கு காணொளி மூலம் இந்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். மத்திய உள்துறை செயலரை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரர் தரப்பு கூறியதால், அதனடிப்படையில் சேர்க்கப்பட்டு மத்திய உள்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்நிலையில் சென்னை தமிழ் வளர்ச்சி வளாகம் தொல்லியல் துறை முதன்மை செயலாளர் அனுப்பிய கடிதத்தின் மூலம் மதுரை கலெக்டர் உத்தரவின்படி இன்று காலை 8:10 மணிக்கு தொல்லியல் துறை துணை இயக்குனர் யத்திஷ் குமார் தலைமையில் ஏழுபேர்கொண்ட தொல்லியல் துறை குழுவினர் திருப்பரங்குன்றம் மலைமேல் சென்றனர். தொல்லியல் துறையினர்‌ தீபத்தூண் உள்ளிட்ட இடங்களில் மூன்றரை மணி நேரம் ஆய்வு செய்து, தீபத்தூணை அளவீடு செய்து முடித்து காலை 11:45 மணிக்கு புறப்பட்டு சென்றனர். தொல்லியல் துறை அதிகாரிகளுடன் திருப்பரங்குன்றம் தாசில்தார் கவிதா, ஆர்.ஐ. திருக்கண்ணன், வி.ஏ.ஓ. க்கள் சுந்தரேசன், முத்துசாமி, மனோஜ் உடன் சென்றனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்