மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிய வழக்கில், அரசின் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பை உறுதி செய்யும் வகையில் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கியது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக, தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, இரு நீதிபதிகள் அமர்வில் டிச., 18 ல் முடிந்தது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். இந்த வழக்கில் இன்று (ஜனவரி 06) காலை, 10:30 மணிக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் கூறியிருப்பதாவது: * கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தான் தீபத்துாண் உள்ளது. தீபத்துாணில் தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பது நகைப்புக்குரியது. தீபத்துாணில் தீபம் ஏற்றப்பட வேண்டும். சண்டை போடக்கூடாது. தீபம் ஏற்றும் போது பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது..
* திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாண் தர்காவுக்கு சொந்தமானது என்பதை ஏற்க முடியாது. அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது. திருப்பரங்குன்றம் வழக்கு தேவையின்றி அரசியல் நோக்கில் பார்க்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட நிர்வாகம் தேவையின்றி பிரச்னையை உருவாக்கியுள்ளது. தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தபோதே தீபம் ஏற்றி இருந்தால் இந்த பிரச்னை ஏற்பட்டு இருக்காது என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்
தீர்ப்பு கூறித்து பக்தர்கள் கூறியதாவது;
சரவணன், திருப்பரங்குன்றம்; இது பல ஆண்டு போரட்டத்திற்கு கிடைத்த வெற்றி. 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்துக்களின் உரிமை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இன்றே தீபம் ஏற்றினால் மகிழ்ச்சி.
மணிமாறன், வேடர்புளியங்குளம்: இது வரவேற்க வேண்டிய தீர்ப்பு. நீதி வென்றது. முருகனை வென்றார் இல்லை. ஓம் முருகா போற்றி போற்றி..
கார்த்திகேயன், பாலாஜி நகர்: கடவுளுக்கு நன்றி. சதுர்த்தியில் சங்கடம் நீங்கியது. முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமையான இன்று சிறப்பான தீர்ப்பு வந்துள்ளது. இந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தை இல்லை. பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றோம்.
கி.தாரணி கிருபா சங்கர். ராகவேந்திரா நகர், மதுரை: கோடான கோடி முருக பக்தர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கேற்ப இந்த மலைக் கோவில் மற்றும் ஊரின் பெயரே திருப்பரங்குன்றம். இனி யாராலும் தீபம் ஏற்றுவதை தடுக்க முடியாது. இவ்வாறு கூறினர்.