வால்பாறை: வால்பாறையில், அம்மன் கோவில்களில் அடுத்த வாரம் பொங்கல்விழா நடப்பதால் ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.
வால்பாறையில் உள்ள எஸ்டேட்களில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பெரும்பாலான அம்மன் கோவில்களில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறும் பொங்கல் விழாவில், வால்பாறையில் இருந்து சென்று பல்வேறு ஊர்களில் வசிக்கும் மக்கள், இந்த விழாவில் தவறாமல் குடும்பத்துடன் கலந்து கொண்டு, அம்மனை வழிபடுகின்றனர். பூக்குணடம் இதனால், வால்பாறையில் ஆண்டு தோறும் எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் பொங்கல் திருவிழா கோலகலமாக நடக்கிறது. எஸ்டேட் அம்மன் கோவில்களில் இந்த ஆண்டு பொங்கல் திருவிழா வரும், 9ம் தேதி முதல், 18ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருவிழா என்றால், சுவாமிக்கு பொங்கல் வைத்து வழிபடுபவர். ஆனால், வால்பாறை தாய்முடி மாரியம்மன் கோவில், கல்லார் முத்துமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்புகட்டி, விரதம் இருந்து பூக்குண்டம் இறங்குகின்றனர்.
இது தவிர, பெரும்பாலான கோவில்களில் பறவைக்காவடி, பால் குடம் எடுத்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். அனைத்து எஸ்டேட்களிலும் நடைபெறும் பொங்கல் திருவிழாவில் கரகாட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. சுற்றுலா பயணியரும் பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். மாடன் வேட்டை வால்பாறை அடுத்துள்ள ஈட்டியார் எஸ்டேட் மாரியம்மன், மாடசுவாமி கோவிலில் ஆண்டு தோறும் பொங்கல் திருவிழா சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. திருவிழாவில் மாடசுவாமி நள்ளிரவில் வேட்டைக்கு செல்லும் காட்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். மாடசுவாமி மயானத்திற்கு சென்று, மீண்டும் கோவிலுக்கு வந்தவுடன், பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய பன்றி, ஆடு, கோழிகளின் ரத்ததை அருளாளி பருகுவார். கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக ‘மாடசுவாமிக்கு ஊட்டு’ என்ற பெயரில், பன்றி, ஆடு, கோழிகள் வழங்கப்படுகின்றன. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் மாடன் வேட்டைக்கு செல்லும் காட்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்கின்றனர்.