திருக்கோஷ்டியூர் கோயில் அஷ்டாங்க விமானத்தில் தங்க ஸ்தூபி நிறுவப்பட்டது



திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத் தங்கத் திருப்பணியை முன்னிட்டு இன்று தங்க ஸ்தூபி விமானத்தில் நிறுவப்பட்டது. தங்க விமானக் கும்பாபிஷேகம் பிப்.6 ல் நடைபெறுகிறது.


சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வரலாறு,புராணச் சிறப்பு மிக்கது அஷ்டாங்க விமானம்.  ‛ஓம் நமோ நாராயணாய’ எனும் மூன்று சொற்களை உணர்த்தும் விதமாக  மூன்று தளங்களாக அமைந்துள்ளது. இந்த மூலவர் விமானத்திற்கு தங்கத் தகடு பதிக்கும் திருப்பணியை தேவஸ்தானம் மற்றும் செளமிய நாராயணன் எம்பெருமானார் சாரிட்டபிள் ட்ரஸ்ட் சார்பில் செய்கின்றனர். விமானத்தின் முதல்நிலை, மத்திமநிலை, அடித்தட்டு என்று மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு  தற்போது உபயதாரர்கள் மூலம் சேர்ந்துள்ள தங்கத்தை வைத்து  முதல்நிலைக்கான திருப்பணி நடந்து வருகிறது. இன்று விமானத்தில் முதல் நிலை உச்சியில் தங்க ஸ்தூபி நிறுவும் திருப்பணி நடந்தது. நேற்று காலை 9:30 மணி அளவில்  தங்க ஸ்தூபி யோக நரசிம்மர் சன்னதியில் வைத்து பட்டாச்சார்யர்களால் பூஜைகள் நடந்தன. பின்னர்  பெரியபெருமாள் சன்னதி எழுந்தருளி தேவஸ்தான பரம்பரை அறங்காவலர்  ராணி மதுராந்தகி நாச்சியார் சார்பில் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து தென்னமரத்து வீதி வலம் வந்தது. பின்னர் ஸ்தூபியில் நவதான்யம்,நவரத்னம்,வரகு நிரப்பி, மேற்கு வாசல் வழியாக விமான உச்சிக்கு ஸ்தூபி எடுத்துச் செல்லப்பட்டது. காலை 10:06 மணிக்கு பட்டாச்சார்யர்களால் பூஜைகள் நடந்து ஸ்தபதி சீனிவாசன் தங்க ஸ்தூபியை விமானத்தின் உச்சியில் நிறுவினார். தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவண கணேசன், அரசு நகை மதிப்பீட்டாளர் செல்ல பாண்டியன், இலங்கை முன்னாள் கவர்னர் செந்தில் தொண்டமான், செயலர் ஸ்ரீராம் பட்டாச்சார்யர், செளமிய நாராயணன் எம்பெருமானார் சாரிட்டபிள் ட்ரஸ்ட் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


திருப்பணி முடிந்து தங்க விமானத்திற்கு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பிப்.1 ல் யாகசாலை பூர்வாங்க பூஜைகள் காலை 8:00 மணிக்கு துவங்குகிறது. பிப். 2 மாலையில் கலசங்கள் பிரதிஷ்டையாகி யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. பிப்.3 ல் 2,3 ம் கால யாகசாலை பூஜைகளும், பிப்.4 ல் 4,5 ம் கால யாகசாலை பூஜைகளும்,பிப்.5ல் 6,7 ம் காலயாகசாலை பூஜைகளும் நடைபெறும். யாகசாலை பூஜைகளில் கோ பூஜை,கஜ பூஜை,அஷ்வ பூஜை, திவ்ய பிரபந்தம்,வேதபாராயணம் நடைபெறும். பிப். 6 காலை 8:00 மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. தொடர்ந்து காலை 9:26 மணி முதல் காலை 10:18 மணிக்குள் சுவாமி சன்னதிகள் மற்றும் அஷ்டாங்க தங்க விமானத்தி்ற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 26

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 6

மேலும்