காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட வருடங்களுக்கு பிறகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால், லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து மண்டல அபிஷேகம் நடைபெற்று வருகிறது, தினமும் பல்லாயிரக்கணக்கானோர் ஏகாம்பரநாதர் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, காஞ்சிபுரம் பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையான தங்கத்தேர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சிபுரம் சங்கர மடம், மடாதிபதி விஜயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் அருளானைப்படி, தேர் செய்யும் பணிக்காக ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. ஏகாம்பரநாதர் இறை பணி அறக்கட்டளை சார்பில், தங்கத்தேர் தயாரிக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் வெகு விமர்சையாக வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் தங்கத்தேர் உற்சவம் எப்போது நடைபெறும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் ரத சப்தமி அன்று, ஜனவரி 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஏகாம்பரநாதர் கோயில் தங்கத்தேர் உற்சவம் நடைபெற உள்ளதாக, விசயேந்திர சரசுவதி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காஞ்சிபுரம் சங்கர மடத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் தெரிவித்ததாவது: ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆசியுடன், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தங்கத்தேர் தயார் செய்யப்பட்டது. தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, நாளாக பார்க்கக்கூடிய ரதசப்தமி அன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், கோயிலில் தங்கத்தேர் உற்சவம் நடைபெறும் எனத் தெரிவித்தார். ரதசப்தமி என்று ரத உற்சவம் நடைபெறுவது மிகவும் விமர்சியானது எனவும் தெரிவித்தார். இன்றைய தினத்தில் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.