அன்னூர்: மொண்டிபாளையம், பெருமாள் கோயில் தேர்த் திருவிழாவில் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.
மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோயிலில், 59 வது ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 24ம் தேதி வாஸ்து சாந்தி பூஜை உடன் துவங்கியது. கடந்த 25ம் தேதி காலை பெருமாளுக்கு காப்பு கட்டப்பட்டது. கொடியேற்றம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு, அன்ன வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. 26ம் தேதி இரவு சிம்ம வாகனத்திலும், 27ம் தேதி இரவு அனுமந்த வாகனத்திலும், 28ம் தேதி இரவு கருட வாகனத்திலும், சுவாமி திருவீதியுலா நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு அம்மன் அழைத்தல் நடந்தது. வெங்கடேச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று (30ம் தேதி) இரவு 8:00 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி உலா நடைபெறுகிறது. நாளை (31ம் தேதி) காலை 5:30 மணிக்கு பெருமாள் தேருக்கு எழுந்தருளுகிறார். காலை 11:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. இரவு 7:00 மணிக்கு வட்டமலை ஆண்டவர் கலைக்குழுவின் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெறுகிறது.