திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு மகாபைரவர் யாகம் நடந்தது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் சோழ மன்னர்கள் போருக்கு செல்லும் முன் பைரவரை வழிபட்ட சிறப்பை பெற்றது. இங்கு மூலபால கால பைரவர் சுவாமி தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். இங்கு தேய்பிறை அஷ்டமியன்று சிறப்ப வழிபாடு நடைபெறும். நேற்று இரவு மாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை இரவு 7:00 மணிக்கு துவங்கினர். தொடர்ந்து மகாபைரவர் யாகத்தில் வேதமந்திரங்கள் முழங்க நெய், வஸ்திராகுதி, புஷ்பாகுதி மற்றும் மகாபூர்ணாகுதி நடந்தது. யாகசாலைக்கு தீபாராதனை நடந்த பின்னர் யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் குடத்திற்கு அடுக்கு தீபம், பஞ்சமுக தீபம், கும்ப தீபம், நாக தீபம், ஒற்றை தீபம் மற்றும் கற்பூர தீபம் ஆகியவற்றால் தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பெண்கள் சாம்பல் பூசணியிலும், தேங்காய் மற்றும் அகல் விளக்கிலும் தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டனர்.