பெருமாநல்லூர்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த 25 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 31 ம் தேதி அதிகாலை வீர மக்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி, முன்னதாக குதிரையுடன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள படைக்கல சாவடிக்கு சென்று அங்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து பரிவார மூர்த்திகளான கன்னிமார் - கருப்பராயன், முனீஸ்வரனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. தொடர்ந்து, கொண்டத்து காளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைப்பெற்றது. அதனை அடுத்து தலைமை பூசாரிகள் மனோகர், விநாயக மூர்த்தி, ஆகியோர் கை குண்டம் வாரி இறைத்து குண்டம் இறங்கி குண்டம் இறங்குவதை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, வீரமக்கள் மஞ்சள் உடை உடுத்தி மஞ்சள் நீர் கிணற்றில் குளித்து, பக்தி பரவசத்துடன் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன் குண்டம் இறங்கினர். வீர மக்கள் வரிசையாக குண்டம் இறங்க தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. காலை 5:40 மணிக்கு தொடங்கிய குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி 11:00 மணி வரை நடைப்பெற்றது. தொடர்ந்து, குண்டம் மூடப்பட்டது. மூடப்பட்ட குண்டத்தின் மீது பக்தர்கள் நேர்த்திகடனாக உப்பு, மிளகு, கருப்பு போட்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. கோவிலுக்கு திருப்பூர், அவிநாசி, சேவூர், குன்னத்தூர், கோபி, நம்பியூர், உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து லட்ச கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். ஒரு ஏடி.எஸ்.பி தலைமையில் 300 க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. மாலை 3:30 மணிக்கு தோரோட்டம் நடைபெற்றது.