முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய தெய்வங்களுக்குரிய நாளாகவும் அமைந்துள்ளது. சூரபத்மனை வதம் செய்த முருகன், இந்திரனின் மகளான தெய்வானையை பங்குனியில் மணம் செய்து கொண்டார். இந்தவிழா முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் பிரம்மோற்ஸவமாக கொண்டாடப்படுகிறது. தர்மசாஸ்தா அவதரித்ததும், சிவபார்வதி, லட்சுமி கல்யாணம் நடந்ததும் இந்நாளில் தான். உத்திர விரதமிருப்பதால் அனைத்து தெய்வங்களின் அருள் பூரணமாக கிடைக்கும்.
பங்குனி உத்திர நாளில் சிவனை கல்யாணசுந்தர மூர்த்தியாக நினைத்து விரதம் இருக்க வேண்டும். இந்த விரதம் இருந்துதான் தேவர்களின் தலைவன் இந்திரன் இந்திராணியையும், மகாலட்சுமி மகாவிஷ்ணுவையும் மணந்தனர். பிரம்மா தன் நாவில் சரஸ்வதி இருக்கும் வாய்ப்பை பெற்றதும், சந்திரன் 27 கன்னிகளை மனைவியாக அடைந்ததும் இந்த விரதத்தை கடைபிடித்து தான். காளையர்களும் இந்த விரதத்தை கடைபிடித்து தங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையை அடையலாம்.
பங்குனி உத்திர நன்னாளின் சிறப்பு : இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது; காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது; மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது; ராமர் சீதையை மணந்தது; லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது; இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது; திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம் நடந்தது; ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் நடந்தது; அர்ச்சுனன் பிறந்தது ஆகிய அனைத்தும் நடந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான். சமஸ்கிருதத்தில் பங்குனி மாதத்திற்கு பல்குணன் என்று பெயரும் உண்டு. இந்த பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார். சிவனின் தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார். ரதியின் பிரார்த்தனைக்கு இணங்க மன்மதனை சிவன் உயிர்பித்த நாளும் இதுதான். மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள்.
உத்திர விரத முறை: பங்குனி உத்திரத்தன்று காலையில் நீராடியதுமே விரதத்தை தொடங்கி விட வேண்டும். பகலில் ஒருவேளை மட்டுமே உண்ண வேண்டும். இயலாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் முருகன், சிவன், பெருமாள் கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும். இந்த விரதத்தால், விரைவில் திருமணயோகமும், செல்வச்செழிப்பும் உண்டாகும். 48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதமிருப்பவர்கள் பிறப்பற்ற முக்தி நிலை அடைவர் என்று விரதநூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர தினத்தில் நாமும் இறைவனை பிரார்த்தித்து பரிபூரண அருளை பெறுவோம்.