சிவகாசி: சிவகாசி அருகே செல்லைய நாயக்கன்பட்டியில்11 வது நுாற்றாண்டைச் சேர்ந்த அரிதான உரல் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மைய உறுப்பினர்களான ரவிச்சந்திரன், பிரேம் கூறியதாவது: பண்டைய தமிழகத்தில் சிவகாசி அருகே திருத்தங்கலைச் சுற்றியுள்ள பகுதிகள் கருநிலக்குடி நாடு என அழைக்கப்பட்டது. திருத்தங்கல் அருகே செல்லையநாயக்கன்பட்டியில் களஆய்வு செய்த போது ஊருக்கு வெளியே வடபகுதியில் ஒரு தனிப்பாறையில் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது.
இக்கல்வெட்டு ஒரே பெரிய கல்லில் குத்து உரலும் மாவை அரைப்பதற்கான உரலும் அடுத்து அடுத்தாக வெட்டி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரே கல்லில் இவ்விதமாக இரண்டு பணிகள் செய்வதற்கு ஒரே பாறையில் வெட்டியுள்ளது மிக அரிதான ஒன்று. இக்கல்வெட்டின் மூலம் மிக முக்கியமான பல அரிய செய்திகளை அறிய முடிகிறது. இந்த உரலின் முன்பகுதியில் நான்கு வரிகளில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில், கருநிலக்குடி நாட்டைச் சேர்ந்த பருத்தியூரில் அவ்வூர் தலைவனான ‘பழியன் உய்யவன்தானனான உலக பாண்டியராயன்’ உரல் என எழுதப்பட்டுள்ளது. அக்காலத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக ஊர் பொதுவாக உரல் வெட்டிக்கொடுக்கும் நற்பணி நடந்துள்ளமையை தெரியப்படுத்துகிறது. இக்கல்வெட்டின் எழுத்தமைப்பை அடிப்படையாகக் கொண்டு இது வெட்டப்பட்ட காலம் 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது என கண்டறிய முடிகிறது. கல்வெட்டு கண்டறியப்பட்ட இவ்வூர் அக்காலத்தில் பருத்தியூர் என் அழைக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. கரிசல் மண்சார்ந்த இவ்வூர் இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்றளவும் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த உரல் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி தொல்பழங்கால குடியிருப்புகளின் தடயங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், அக்கால மக்கள் பயன்படுத்திய கற்பாசிகள், விளையாட்டிற்காகப் பயன்படுத்தப்பட்ட வட்ட சில்லுகள் போன்றவை இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன, என்றனர்.