தலை மொட்டைக்காக ஆண்டாண்டு காலம் காத்திருக்கும் ஊர் மக்கள்: மதுரையில் ஒரு வினோத கிராமம்



மதுரை: பொன்னம்மாள் தெய்வத்தின் அருளால் குறைந்தது ஒன்பதுக்கும் மேல் ஒற்றைப்படையில் தலைப்பிள்ளைகள் இருந்தால் தான் அவர்களுக்கு மொட்டை அடித்து காது குத்துவோம். அதுவரை எந்த திருவிழாக்களும் நடக்காது என ஜோதியாபட்டி மக்கள் தெரிவிக்கின்றனர்.


மதுரை கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்தது மாங்குளம் மற்றும் ஜோதியாபட்டி. இங்கு பொன்னியம்மன் கோயில் களரி திருவிழா 7 ஆண்டுகளுக்கு பின் சில நாட்களுக்கு முன் நடந்தது. விழாவின் 2ம் நாளில் கிடா வெட்டி தலைப்பிள்ளைகள் 13 பேருக்கு மொட்டை அடித்து காது குத்தினர். பொன்னியம்மன் கன்னி தெய்வம் என்பதால் கோயில் கர்ப்பக்கிரகம் முன் எப்போதும் இருபுறமும் பச்சைக் குடிசை வேயப்பட்டிருக்கும். பூஜாரிகள் சுப்பிரமணியன், மழுவேந்தி சாமி கூறியதாவது: இக்கிராமங்களில் குறைந்தது ஒரே நேரத்தில் 9 அல்லது அதற்கு மேல் ஒற்றைப்படையில் தலைப்பிள்ளைகள் எண்ணிக்கை இருந்தால்தான் கோயிலில் திருவிழாவே நடக்கும். அப்போதுதான் குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காதும் குத்துவோம். அதுவரை எந்த விழாக்களும் நடக்காது. 9 பேர் சேராமல் 16 ஆண்டுகள் வரைகூட காத்திருந்துள்ளோம். அதுவரை அந்த தலைப் பிள்ளைகள் முடிகூட வெட்டாமலும், காது குத்திக்கொள்ளாமலும் இருப்பர். இது இக்கிராம மக்களின் 300 ஆண்டு கால ஐதீகம்.


தலைப்பிள்ளைகள் ஒற்றைப்படையில் வந்துவிட்டால், அந்தாண்டு பங்குனி மாதம் திருவிழா முடிவு செய்யப்படும். விழாவின் முதல் நாள் திருமணமான ஆண்கள் மட்டும் வயதுக்கேற்ப வரிசைப்படி மண்பானையில் சோறு சமைப்பர். தல வரலாறு மதியம் சாமியாட்டம் முடிந்தபின்னர், எறி சோறு என்னும், காக்கைகளுக்கு சோற்றுருண்டை எறியும் நிகழ்வு நடக்கும். இரவில் வள்ளி திருமணம் நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னி வளநாட்டைச் சேர்ந்த கன்னிப்பெண் பொன்னம்மாள். அவளை பெண் கேட்டு இளைஞன் ஒருவன் வந்தான். அவனைப் பிடிக்காததால் பொன்னம்மாள், அண்ணன் கருப்பசாமி, 2 காவல் நாய்கள் உதவியுடன், மாடுகளுடன் பொன்னமராவதி வந்தாள். மாடுகளை கவர நினைத்த சிலர், மன்னிடம் தங்களுடையது என்று முறையிட, 12 படி சுடும் நெய்யில் மோதிரத்தை எடுப்பவர்களுக்கே மாடுகள் சொந்தம் என்றார். பொன்னம்மாள் துணிந்து எடுக்க முயன்றபோது மழுவேந்திசாமி என்பவர் அவளுக்காக மோதிரத்தை எடுத்துக்கொடுத்தார். இதற்கிடையே பொன்னம்மாளை மன்னர் விரும்ப, அங்கிருந்து தப்பித்து ஜோதியாபட்டியை அடைந்த பொன்னம்மாள் ஊருக்கு சேவை செய்து மறைந்து விடுகிறாள். அவளுடன் காவலுக்கு வந்த வீரண்ணன், முத்துக்கருப்பு உட்பட 11 பேரும் காவல் தெய்வங்களாக மக்கள் வழிபடுகின்றனர். பொன்னம்மாளை, பொன்னியம்மன் என்ற பெயரில், தீப வடிவில் ஜோதியாபட்டி, மாங்குளம் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்