சென்னை: சென்னையின் பல்வேறு கலாசார பாரம்பரியங்களை உடைய திருவல்லிக்கேணியின் வரலாறு, கட்டடக்கலை குறித்து சுற்றுலா பயணியர் அறிய சிறப்பு நடை பயண சுற்றுலா அறிவிக்கப்பட்டு உள்ளது. கோடை காலத்தையொட்டி, சென்னையை மையப்படுத்தும் வகையில், பல்வேறு சிறப்பு ஒரு நாள் சுற்றுலாக்களை, தமிழக சுற்றுலாத் துறை அறிவித்து வருகிறது.
மெட்ராஸ் இன்ஹெரிடெட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து மேற்கொள்கின்றன. அந்த வகையில், சென்னை மாநகரின் பழமையான மற்றும் பல்வேறு சமூக கலாசார பாரம்பரியங்களை உடைய திருவல்லிக்கேணியின் வரலாற்றை சுற்றுலாப் பயணியர் அறியும் வகையில், ‘எவ்ரிபடீஸ் டிரிப்ளிகேன்’ என்ற சிறப்பு நடை பயணத்தை அறிவித்துள்ளது. வாலாஜா சாலை பள்ளிவாசல் முதல் பார்த்தசாரதி கோவில், பழமையான வீடுகள், கட்டடக் கலை உட்பட, திருவல்லிக்கேணியின் முக்கிய இடங்களுக்கு, பயணியர் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். வரும் 17ம் தேதி காலை 6:30 மணிக்கு, இந்த சிறப்பு நடைப் பயணம் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க, மாணவ – மாணவியருக்கு 450 ரூபாய்; பெரியவர்களுக்கு, 700 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பங்கேற்பாளர்கள் திருவல்லிக்கேணி உயர் சாலையில் உள்ள முஹம்மதன் நுாலகம் அருகே கூட வேண்டும் என, சுற்றுலா துறை அறிவித்துள்ளது.