சபரிமலை வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு



சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் மற்றும் மத சுதந்திரத்தின் எல்லை குறித்த மேல்முறையீட்டு வழக்குளின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்றுடன் நிறைவு பெற்றது. 16 நாட்கள் வரை நீடித்த அனல் பறக்கும் வாதங்களுக்குப் பின், இவ்வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த 2018 ல் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


கடந்த, 2019ல் இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை மட்டுமின்றி, பிற மதங்களிலும் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என கூறி, ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையில், தமிழகத்தை சேர்ந்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, அஹ்சானுதீன் அமானுல்லா, அரவிந்த் குமார், அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ், பிரசன்னா பி.வரலே, ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. 


மத சுதந்திரம் மற்றும் சமத்துவ உரிமைகளுக்கு இடையிலான மோதலை தீர்க்க ஏழு முக்கிய கேள்விகளை உச்ச நீதிமன்றம் முன்வைத்தது. தனிநபரின் மத சுதந்திரத்திற்கும், ஒரு மதப் பிரிவின் சுதந்திரத்திற்கும் உள்ள எல்லை எது? மத நடைமுறைகள் அரசியலமைப்பு ஒழுக்கத்திற்கு உட்பட்டதா? அரசியலமைப்பு ஒழுக்கம் என்பது எதை குறிக்கிறது; அது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா?


மத நம்பிக்கைகளில் நீதிமன்றங்கள் எந்த அளவிற்கு தலையிட முடியும்? ஒரு மதத்தை சாராதவர்; அந்த மதத்தின் சடங்குகளை எதிர்த்து வழக்கு தொடர முடியுமா? மத அமைப்புகளின் உரிமைகள், மற்ற அடிப்படை உரிமைகளுக்கு கட்டுப்பட்டதா? சட்டப்பிரிவு 25 (2) (பி)–ல் கூறப்பட்டுள்ள ஹிந்துக்களின் பிரிவுகள் என்பதன் பொருள் என்ன? இப்படி ஏழு கேள்விகள் தொடர்பாக 16 நாட்கள் வரை அனல் பறக்கும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, ‘சபரிமலையின் பாரம்பரிய சடங்குகள் அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும். இதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது’ என மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். அதே போல், பார்சி சமூகத்தில் பெண்களின் உரிமை மற்றும் மசூதிக்குள் பெண்கள் நுழைவது குறித்தும் விவாதங்கள் எழுந்தன. மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘75 ஆண்டுகளாக பார்சி சமூகத்தில் யாரையும் மதத்தை விட்டு நீக்கும் நடைமுறை பின்பற்றப்படவே இல்லை’ என, சுட்டிக்காட்டினார். ‘ஹிந்து மதம் என்பது வெறும் வாழ்க்கை முறை அல்ல; அது ஒரு ஆழமான தத்துவக் கட்டமைப்பு’ என வழக்கறிஞர் ராகேஷ் திவேதி வாதிட்டார். சீராய்வு மனுக்களுக்கு ஆதரவான வாதங்கள் மற்றும் பிரதிவாதங்கள் என, 16 நாட்களாக நடந்த விசாரணை நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து, இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


ஜூன் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தின் கோடை கால விடுமுறை தொடங்குகிறது. எனவே, விடுமுறை நாட்களில் நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கப் போகும் தீர்ப்பின் மூலம், சபரிமலைக்கு மட்டுமின்றி, மசூதிக்குள் பெண்கள் நுழையலாமா? பார்சி பெண்களின் மத உரிமை, மத நடைமுறைகளில் நீதிமன்றம் எவ்வளவு துாரம் தலையிடலாம் போன்ற முக்கிய கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. – டில்லி சிறப்பு நிருபர் – 


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்