திருப்பூர்: தேர்த்திருவிழாவை முன்னிட்டு, சிவாச்சாரியார் மற்றும் பட்டாச்சார்யாரின் வேதமந்திரங்கள், ஓதுவாரின் திருமுறை பண்ணிசை பாடல்களுடன், சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாக தேர்த்திருவிழா நடந்து வருகிறது. இன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, நாளை திருக்கல்யாண உற்சவம், 30 மற்றும் 31ம் தேதிகளில் தேரோட்டம் நடைபெற உள்ளது. நேற்று காலை, சிவாச்சார்யார்கள், பட்டாச்சார்யார்களின், சிறப்பு பூஜைகளுடன், தேர்களுக்கு கலசம் பொருத்தும் வைபவம் நடந்தது. அதனை தொடர்ந்து, தேர் அலங்கார பணி துவங்கியுள்ளது. இன்று காலை, ஆனந்தவல்லி சமேத ஸ்ரீசந்திரசேகரர் மற்றும் வீரராகவப்பெருமாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். காலை, மகா அபிேஷகத்தை தொடர்ந்து, மாலையில் சிறப்பு அலங்காரபூஜைகள் நடந்தன. ஒவ்வொரு கால பூஜையின் போதும், சிவாச்சார்யார் மற்றும் பட்டாச்சார்யாரின், வேத மந்திரரங்களுடன், ஓதுவார் தியாகராஜன் குழுவினரின், தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறை பதிங்கள் பண்ணிசையுடன் பாராயணம் செய்யப்படுகிறது.
இன்று இரவு, 7:30 மணிக்கு, சோமாஸ்கந்தர் அதிகார நந்தி வாகனத்திலும், விசாலாட்சி அம்மன் யாழி வாகனத்திலும், ஸ்ரீதேவி பூதேவி சமேத வீரராகவப்பெருமாள் கற்பக விருட்ச வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பெருமாள் கோவில் விழா மேடையில் நேற்று, சண்முகாலயா இசை நாட்டியப்பள்ளி சார்பில், ‘வைகாசியில் வைகுந்தனும், விசாகத்தில் விஸ்வேஸ்வரரும்’ என்ற இசை நடன நிகழ்ச்சி நடந்தது.