தேவகோட்டை; தேவகோட்டை அருகே எழுவங்கோட்டையில் மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேவகோட்டை தாலுகாவில் எழுவங்கோட்டை கொல்லங் கண்மாயில் மண்ணில் ஒரு கல்வெட்டு இருப்பதாக ஆறாவயல் பெரியய்யா, எழுவங்கோட்டை ஓய்வு பெற்ற அரசு அலுவலர் செல்லம் இருவரும் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி வரலாற்று இணை பேராசிரியர் வேலாயுதராஜா, புதுக்கோட்டை தொல்லியல் கழக தலைவர் ராஜேந்திரன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இரு ஆராய்ச்சியாளர்களும் சம்பந்தப்பட்ட பகுதியில் புதையுண்டு கிடந்த கல்லை வெளியே எடுத்து ஆராய்ச்சி செய்தனர். இக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் காலத்து கல்வெட்டு என அறிந்தனர். கல்வெட்டு பற்றி மூத்த தொல்லியல் ஆராயாச்சியாளர்களுடன் ஆய்வு செய்தனர்.
இது குறித்து பேராசிரியர் வேலாயுதராஜா கூறியதாவது, எழுவங்கோட்டையில் காணப்பட்ட கல்வெட்டு ஐந்து அடி உயரத்தில், கல்லின் நான்கு புறத்திலும் மொத்தம் 78 வரிகளில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் இக் கல்வெட்டு கோனேரின்மை கொண்டான் ஆணை என்று துவங்குகிறது. இம் மன்னரின் கல்வெட்டுகள் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சதுர்வேதி மங்கலம் அரண்மனைசிறுவயல், கம்பனூர் பகுதிகளில் காணப்படுகின்றன. இக் கல்வெட்டு வீரபாண்டியனின் ஏழாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது என குறிப்பிடப்படுகிறது. வீரபாண்டியனின் இதே ஆட்சியாண்டை சேர்ந்த மற்றொரு கல்வெட்டு திருப்புத்தூர் பெரிச்சி கோவில் சுகந்தவனேஸ்வரர் கோயிலிலும் காணப்படுகிறது. இங்கு காணப்படும் கல்வெட்டு பொது ஆண்டு 1296 முதல் பொது ஆண்டு 1342 வரை பாண்டிய நாட்டை ஆண்ட மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியனின் கல்வெட்டாகும். இம்மன்னன் தன் ஆட்சிக்காலத்தில் 1311 இல் மாலிக்காபூர் படையெடுப்பின் போதும் 1318 ல் முகமது பின் துக்ளக் ஆகியோரின் படையெடுப்பின் போதும் மதுரையைத் தவிர்த்து திருநெல்வேலி, திருச்சி, ராமநாதபுரம், பகுதிகளில் இருந்து ஆட்சி செய்து உள்ளார்.
இக்கல்வெட்டில் , வீரபாண்டியன் இரவிசேரி பற்று நாட்டார்க்கு, தை மாதம் முதல் மார்கழி வரை ஆண்டு ஒன்றுக்கு பல உபாதிகள் ( வரிகள்) உட்பட புதுப்பொன் ஆயிரத்திக்குப் பதினாயிரம் பணமாக மாத விழுக்காட்டிலே நிச்சயித்த செய்தியை கூறுகிறது. கார்த்திகை மாதத்தில் அரச ஆணை கல்வெட்டாக பொறிக்கப்பட்டிருப்பதால் தை மாதம் முதல் மார்கழி வரை என வரியாக நிச்சயித்து கூறப்பட்டிருக்கிறது. மேலும் கல்வெட்டு வெட்டிய பொன்பாதி உடையான் சுந்தர பாண்டிய காலிங்கராயன் ஆகிய அதிகாரிகளின் பெயர்கள் காணப்படுகின்றன. வீரபாண்டியனின் பெரிச்சிகோவில் கல்வெட்டிலும் அதிகாரியான காலிங்கராயன் பெயர் காணப்படுவதாக பேராசிரியர் வேலாயுராஜா கூறினார்.