பூலாங்குறிச்சி: திருப்புத்தூர் ஒன்றியம் திருக்கோளக்குடியில் ஆத்மநாயகி சமேத திருக்கோளநாதர் கோயிலில் ஆனி பிரமோத்ஸவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது..
இக்கோயிலில் ஆனி பிரமோத்ஸவம் ஜூன் 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து தீபாராதனை நடந்தது. பின்னர் இரவில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமி திருவீதி உலா நடந்தது. இன்று ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு அதிகாலையில் தேரில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர். விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் சப்பரங்களில் எழு்நதருளினர்.தொடர்ந்து கிராமத்தினர் தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். காலை 8:30 மணிக்கு தேர்க்காலிற்கு சிறப்புபூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து குன்றக்குடி தேவஸ்தான ஆதீனகர்த்தர் பொன்னம்பல அடிகள்,கிராம அம்பலகாரர்கள் முன்னிலையில் வடம் பிடித்து தேரோட்டம் துவங்கியது. பின்னர் கிராமத்தினர் வடம்பிடித்து கோயிலைச்சுற்றி 4 வீதிகளிலும் வலம் வந்து பிற்பகல் 3.30 மணிக்கு நிலைக்கு வந்தது. சுற்று வட்டாரக்கிராமத்தினர் திரளாக பங்கேற்றனர். இன்று காலையில் தீர்த்தவாரியும், மாலையில் சுவாமி மலைக்கு எழுந்தருளலும் நடைபெறும்.