பொள்ளாச்சி: ஆடி மாதம் அம்மனுக்கு உகந்தது. மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், சிறப்பு பூஜைகளும் இம்மாதத்தில் நடக்கிறது. ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. நேற்று ஆடி மாதம் பிறப்பு மற்றும் முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவில் முன்புள்ள பீடத்தில் உப்பு கொட்டி நேர்த்தி கடன் செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். அம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள் கூழ் வழங்கி வழிபட்டனர். ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், ஒன்பது வகையான அபிேஷகம், மலர் மாலைகளால் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டன. வால்பாறை வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்பசுவாமி சன்னதியில், ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று காலை, சிறப்பு யாக பூஜை, அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தன. காசிவிஸ்வநாதன் சன்னதியில் எழுந்தருளியுள்ள விஷ்ணுதுர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. வால்பாறை எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலில் கணபதி பூஜையும், அபிேஷக, அலங்கார பூஜையும் நடந்தது.