தேனி; சின்னமனூர் அருகே உள்ள புகழ்பெற்ற குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் பகவான் திருக்கோவிலில், ஆடி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
குச்சனூரில் சுரபி நதிக்கரையில் அமைந்துள்ள இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாத சனிவாரத் திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கோவிலில் கொடிமரம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், திருவிழா அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், ஆகம விதிப்படி ஆடி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் தடையின்றி வழிபாடு நடத்திட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஆடி மாத முதல் சனிக்கிழமையான இன்று அதிகாலை முதலே பக்தர்கள் குச்சனூர் கோவிலில் குவியத் தொடங்கினர். தற்போது சுரபி நதியில் தண்ணீர் வரத்து இல்லாததால், கோவில் நிர்வாகம் சார்பில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள குளியல் அறைகளில் பக்தர்கள் புனித நீராடினர். தொடர்ந்து, சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றியும், பொரி படைத்தும், காக்கை வடிவிலான மண் சிலைகளை காணிக்கையாக வைத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டு வருகின்றனர். இவ்விழாவின் முக்கிய நிகழ்வுகளாக நீலாதேவி - சனீஸ்வரர் பகவான் திருக்கல்யாண விழாவும், சோனை கருப்பண்ணசாமிக்கு மது படையல் மற்றும் கறி விருந்துடன் கூடிய ஆடி சனிவார நிறைவு விழாவும் அடுத்தடுத்து நடைபெற உள்ளன. ஆடி சனிக்கிழமையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்வதை உறுதி செய்ய, சின்னமனூர் காவல் நிலைய காவல்துறையினர் அங்கு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.