ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நமச்சிவாய, அரோகரா கோஷம் முழங்க 48 அடி உயர தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இக்கோவிலில், தேர்திருவிழா கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தினமும் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடந்தது. இன்று தேர் திருவிழாவையொட்டி, காலை 10:00 மணிக்கு மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிஷேகத்துடன் உச்சிகால பூஜை நடந்தது. பின் சர்வ அலங்காரத்துடன் புறப்பட்ட பஞ்சமூர்த்திகளுக்கு கோவில் முன் மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சுவாமிகள் தேரில் எழுந்தருளச் செய்து, மதியம் 3:30 மணியளவில் தேரை திரளான பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாய’; ‘அரோகரா’ கோஷம் முழங்க வடம் பிடித்தனர். நாளை 26ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும், நாளை விடையாற்றி உற்சவமும் நடைபெற உள்ளது. அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், செயல் அலுவலர் ராஜாத்தி உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். ஏ.டி.எஸ்.பி., சரவணன் தலைமையில், திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பார்த்திபன் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.