சென்னை: வடலூரில் 100 கோடி ரூபாய் மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக சென்னை ஐகோர்ட்டில் ஹிந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
கடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை பெருவெளியில், முந்தைய திமுக அரசு சார்பில், 100 கோடி ரூபாய் மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி துவங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்வதேச மையம் அமைப்பதற்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருந்தனர்.இந்த வழக்கு இன்று(ஜூலை 30) சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘ வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக’’ தெரிவித்தார். மேலும், ஜோதி தரிசனத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மாற்று இடத்தில் யாகசாலை, நூலகம், நூலகம், முதியோர் இல்லம் கட்ட திட்டம் உள்ளதாகவும், சத்திய ஞானசபையின் 71.24 ஏக்கர் நிலத்தில் சுற்றுச்சுவர் கட்ட உள்ளதாக தெரிவித்தார். இதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள், வழக்கை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.