திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே சேதுக்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். சேதுக்கரை மன்னார் வளைகுடா கடற்கரை வளாகப் பகுதிகளில் இன்று அதிகாலை 4:00 மணி முதல் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரைக்கு நீராடுவதற்காக குவிந்த வண்ணம் இருந்தனர். முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், பித்ரு கடன் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை புரோகிதர்கள் மூலம் நிறைவேற்றினர். முன்னோர்களுக்கான பிருத்ருக்கடன் பூஜைகளை நிறைவேற்றிய பிறகு சேதுக்கரை கடலில் புனித நீராடினர். சேது பந்தன ஜெய வீர ஆஞ்சநேயர் கோயிலில் நீண்ட வரிசையில் தேங்காய் உடைத்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு மற்றும் அர்ச்சனைகளை செய்தனர்.
சேதுக்கரை அருகே சின்ன கோயிலில் உள்ள வெள்ளை பிள்ளையார், தமிழ் மாமுனிவர் அகத்தியருக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவதற்காக குவிந்தனர். சேதுக்கரை ஊராட்சி சார்பில் பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பசுக்களுக்கு பச்சரிசி, வெல்லம், அகத்திக்கீரை உள்ளிட்டவைகளை உணவாக கொடுத்தனர். காகங்களுக்கு அன்னமிட்டனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான சிறப்பு பஸ்கள் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டன. திருப்புல்லாணி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.