பிள்ளையார் சிற்பத்துடன் பாடல் 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு



செஞ்சி; செஞ்சி அருகே கி.பி. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிள்ளையார் சிற்பம், கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேட்டவலத்தை சேர்ந்த ஆசிரியர் பாரதிராஜா, செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் சுதாகர் ஆகியோர் செஞ்சி அடுத்த பாக்கம் கிராமத்தில் கள ஆய்வு செய்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பாக்கம் கிராமத்தில் சிவன் கோவில் அருகில் பாறை உள்ளது. இந்த பாறையில் இரண்டரை அடி உயரம், இரண்டு அடி அகலமும், நான்கு கரங்களுடன் பிள்ளையார் புடைப்பு சிற்பம் செதுக்கி உள்ளனர். இதன் இடது புறம் வெண்பா வடிவில் கல்வெட்டு ஒன்று உள்ளது.


கி.பி., 13ம் நூற்றாண்டை சேர்ந்த அந்த கல்வெட்டில் மகத நாட்டு மன்னன் வாணகோவரையனின் கொடை சிறப்பு குறிப்பிட்ட ப்பட்டுள்ளது. இந்திரன் பெய்வித்த பெருமழையில் இருந்து ஆயர்பாடி மக்களையும், ஆநிரைகளையும் கோவர்த்தன மலையைத் தூக்கி பகவான் கண்ணன் காப்பாற்றியதையும், சூரபத்மனை அழிக்க முருகப்பெருமான் தனது வேலால் கிரவுஞ்ச மலையைத் தகர்த்ததையும் குறிப்பிட்டு, அதுபோல் வாணகோவரையர் தன்னை நாடி வரும் பாணர்கள், புலவர்கள், இரவலர்களுக்கு வாரி வழங்குவதற்காக மலைபோல் செல்வங்களை குவித்து வைத்திருந்தார் என அவரது கொடைச் சிறப்பை குறிப்பிட்டுள்ளனர்.


மகதை மண்டலம் என்பது சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியாகவும், இதன் தலைநகராக ஆறகளூர் விளங்கியதாகவும் ஏற்கனவே உள்ள ஆய்வுகளில் தெரிவித்துள்ளனர். மேலும், கல்வெட்டின் அருகில் உள்ள ஓடையில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கருதப்படும் 15க்கும் மேற்பட்ட கற்தேய்ப்புக் குழிகள் காணப்படுகின்றன. இக்குழிகள் பண்டைய மனிதர்கள் நீர்நிலைகளின் அருகில் கல் ஆயுதங்களை கூராக்கியதால் ஏற்பட்டவையாக இருக்கலாம். ஆய்வின்போது கல்லூரி மாணவர்கள் பிரகாஷ், ராஜகணேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்