மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று கோலாட்டம் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று தொடங்கிய நவராத்திரி திருவிழா வரும் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முதல் நாளில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் , இரண்டாம் நாளில் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன் மூன்றாம் நாளான இன்று கோலாட்டம் அலங்காரத்தில் எழுந்தருளினார். நவராத்திரி விழாவையொட்டி, மீனாட்சி அம்மன் சன்னதி மற்றும் கொலு மண்டபம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும், கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் 11 அரங்குகளில் பல்வேறு தெய்வங்களின் திருவுருவச் சிலைகள், அம்மனின் அவதாரங்கள் மற்றும் திருவிளையாடல் புராணக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து, திருக்கல்யாண மண்டபத்தில் ஆன்மிகச் சொற்பொழிவுகள், பரதநாட்டியம், வீணை இசை, கர்நாடக சங்கீதம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கோலாட்டம் அலங்காரத்தில் அருள்பாலித்த மீனாட்சி அம்மனை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.