திருமலை: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் நவம்பர் 16-ம் தேதி பாரம்பரிய முறைப்படி புஷ்பயாகம் நடைபெற உள்ளது. இதற்கான அங்குரார்ப்பணம் நவம்பர் 15-ம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். நவம்பர் 16-ம் தேதி மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அங்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெறும். தொடர்ந்து மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு வகையான மலர்கள் மற்றும் புனித இலைகளால் சுவாமிக்கு புஷ்பயாகம் நடத்தப்படும். மாலையில் சகஸ்ர தீப அலங்கார சேவைக்குப் பிறகு, நான்கு மாட வீதிகளில் மலையப்ப சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதையொட்டி நவம்பர் 16-ம் தேதி கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் பிரம்மோற்சவம் ஆகிய ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.