நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நத்தம் அருகே திரமலைக்கேணியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், கோமாதா பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் சேவல் உருவம் பொறித்த கந்தசஷ்டி திருக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் முருகப்பெருமானுக்கு 21 வகையான திரவிய அபிஷேகங்களும், தீபாராதனைகளும், பூஜைகளும் நடந்தது. ராஜாங்க திருக்கோலத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.விழாவில் வெளி மாவட்ட பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நாளை முருகப்பெருமான் சிவ பூஜை திருக்காட்சியும், நாளை சிவ உபதேச திருக்காட்சியும், நவ-13-ல் அருணகிரியாருக்கு நடனக்காட்சி அருளல் நிகழ்ச்சியும், 14-ல் வேல்வாங்கும் திருக்காட்சியும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கந்தசஷ்டி சூரசம்ஹாரம் வருகிற நவ.15 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது. மறுநாள் 16-ம் தேதி காலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் அழகுலிங்கம், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் பாலசரவணன் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.