ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் திருமேனியை பாதுகாக்கும் ரகசியம்! | 1000th year celebrations of holy Sri Ramanuja Acharya | ராமானுஜரின் 1000வது நட்சத்திர வைபவம்

ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் திருமேனியை பாதுகாக்கும் ரகசியம்!

ஏப்ரல் 20,2017



ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் ஸ்ரீராமானுஜர் அவதரித்த, 1,000மாவது ஆண்டு விழா அடுத்த ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில் உள்ள ஸ்ரீ ராமனுஜரின் திருமேனியை பருவ நிலைக்கு ஏற்ப பல நுாறு ஆண்டுகளாக பாதுகாக்கும் ரகசியத்தை இந்த பகுதியில் விரிவாக பார்ப்போம்.

ஸ்ரீபெரும்புதுாரில், 1,017ம் ஆண்டு, ராமானுஜர், சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், ஆந்திர மாநிலம் திருப்பதி, கர்நாடக மாநிலம் மேலக்கோட்டைதிருநாராயணபுரம் ஆகிய பல திவ்ய தேசங்களில் வாழ்ந்து, ஆன்மிக பணிகளிலும் சமய சீர்திருத்த பணிகளையும், வைணவத்தை தழைத்தோங்கச் செய்ய, விசிஷ்டாத்வைதம் என்ற உயரிய கோட்பாட்டையும் வகுத்து தந்தார்.பல கோவில் கோட்பாடுகளையும், பூஜை முறைகளையும் வகுத்து தந்தார். சிறந்த மகானாகவும், தலைச்சிறந்த வைணவ ஆச்சாரியராகவும் திகழ்ந்தார்.

ராமானுஜர் பற்றி பிற்கால தலைமுறையினர் அறிய, அவர் வாழ்ந்த காலத்திலேயே ராமானுஜர் போல, இரண்டு உற்சவ விக்ரங்களை பிரதிஷ்டைச் செய்தனர். அவற்றுள் ஒன்றை, ராமானுஜர், ஆரத் தழுவி தன் உடலில் இருந்த ஆத்மசக்தி முழுவதையும் அதில் பிரதிஷ்டை செய்தார்.இந்த திருமேனி, தானுகந்த திருமேனி (ராமானுஜரே மிகவும் உகந்த திருமேனி) என்று அழைக்கப்படுகிறது. இதேபோன்று மற்றொரு திருமேனியை திருநாராயணபுரத்தில் பிரதிஷ்டைச் செய்தனர். அது, தமக்குகந்த திருமேனி , அதாவது, அடியார்கள் மிகவும் உகந்த திருமேனி என, அழைக்கின்றனர்.ராமானுஜர், 120 ஆண்டுகள் வாழ்ந்து, இறுதியாக ஸ்ரீரங்கத்தில் ஜீவித காலத்திற்கு பின் அவருடைய திருமேனியை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது, தானான திருமேனி என, அழைக்கப் படுகிறது.

வெந்நீர், போர்வை, சந்தனம்... ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராமானுஜர் திருமேனி ஆண்டுதோறும் ஐப்பசி மாதம், மூலம் நட்சத்திரம் அன்று ஸ்ரீ மணவாள மாமுனிகளின் அவதார திருநாள் தொடங்கி, தை மாதம் ஹஸ்தம் நட்சத்திரம் அன்று, ஸ்ரீ கூரத்தாழ்வாரின் அவதார தினம் வரை உள்ள இடைப்பட்ட மழைக் காலம் மற்றும் குளிர் காலங்களில், ராமானுஜரின் உற்சவ திருமேனிக்கு திருமஞ்சனம் செய்யும் போதும், திருவாராதனம் செய்யும் போதும், வெந்நீரை உபயோகிக்கின்றனர்.மேலும், அந்த காலங்களில், இரவு நேரங்களில் ராமானுஜரின் திருமேனிக்கு குளிராமல் இருப்பதற்கு, சால்வைகள், ரஜாய் எனப்படும் போர்வைகள் சாற்றப்பட்டு மிகவும் பாதுகாக்கின்றனர். இதேப்போல் கோடை காலத்தில் மிகவும் குளிர்ந்த, துாய்மையான நீரில் திருமஞ்சனம் செய்கின்றனர்.அதிக வெப்பம் உள்ள காலங்களில் வெப்பத்தால் ஏற்படும் சூட்டை தணிக்க, அவருடைய திருமேனியின் பின்புறம் சந்தனம் பூசப்படுகிறது. இந்த மரபு, தொடர்ந்து பல நுாறு ஆண்டுகளாக மிகவும் சிறப்பாக போற்றி பாதுகாத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

தானுகந்த திருமேனி: இந்தியாவில் உள்ள அனைத்து வைணவ கோவில்களிலும் ராமானுஜரின் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்படுகிறது. இதில் இந்த இரண்டு திருமேனி விக்ரங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.இவை தொடர்ந்து பல வருடங்களாக வழிபட்டு,பாதுகாக்கப்படுகின்றன. இதில், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த தானுகந்த திருமேனியை வைணவ அடியார்கள், கோவில் கைங்கர்யகாரர்களும், பல நுாறு ஆண்டுகளாக மிகவும் பாதுகாப்பாக பாதுகாத்து வருகின்றனர்.

ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கு தாய்வீட்டு சீதனம்!

மேலும்