முத்துநகை ரத்தினங்கள் மூக்குத்தி பில்லாக்கு சத்தமிடும் கங்கணங்கள் சங்கீத மெட்டியுடன் சித்திரை நிலவுமுகம் சிங்காரப் புன்சிரிப்பு பத்தரைப் பசும்பொன்னே பவனிவரும் இலக்குமியே!
பாற்கடலில் உதித்தவளே பவள நிறத்தவளே சீர்மேவும் சித்திரமே சிங்கார நல்முத்தே கார்மேகக் கருணைமனம் கைகளோ வள்ளன்மை பார்வையிலே பலனுண்டு பைங்கிளியே இலக்குமியே!
செல்வச் சிறப்புடனே சீர்மை வளத்துடனே வெல்லச் சுவையுடனே வெற்றி தருபவளே அள்ளக் குறையாத அறமொடு பொருளீந்து உள்ளக் களிப்பினிலே ஒன்றிடுவாய் இலக்குமியே! |