கார்த்திகை தீப திருவிழாவிற்கு அகல்விளக்கு தயாரிப்பு பணி தீவிரம்



காஞ்சிபுரம்; கார்த்திகை தீபத் திருவிழா டிச., 13ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவையொட்டி, வீடு, கடை, அலுவலகம், தொழிற்கூடம், கோவில் உள்ளிட்ட இடங்களில் அகல்விளக்கில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கமாக உள்ளது. இவ்விழாவை ஒட்டி, காஞ்சிபுரம் திருக்காலிமேடில், 10க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள், அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 


இதுகுறித்து திருக்காலிமேட்டை சேர்ந்த மண்பாண்ட மூத்த கலைஞர் பி.சிவலிங்க உடையார் கூறியதாவது: கடந்த 50 ஆண்டுகளாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறேன். கார்த்திகை தீபத்தையொட்டி, கடந்த மாதம் அகல்விளக்கு தயாரிப்பு பணியை துவங்கினேன். ஒரு நாளைக்கு, 1,500 விளக்குகள் தயார் செய்து வருகிறேன். மொத்த விலையில், ஒரு அகல்விளக்கு 1 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மழை பெய்தால், தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்நிலைகளில் மண் எடுக்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். மழைக்காலங்களில், மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்யவும், உற்பத்தி செய்த மண்பாண்டங்களை சேமித்து வைத்து சூளைபோடுவதற்கும் கைத்தொழில் வாரியத்தின் வாயிலாக திருக்காலிமேட்டில் மண்பாண்ட தொழிலுக்கான தொழிற்கூடம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தமிழக அரசால் சமீபத்தில் வழங்கப்பட்ட மின்சக்கர இயந்திரம் வடிவமைப்பு சரியாக இல்லை. இந்த இயந்திரத்தில் மண்பாண்டம் தயாரிக்க முடியாத சூழல் உள்ளது. மேலும், மின்மோட்டாரை இயக்கினால், மாவு அரைக்கும் மிஷனைப்போல இரைச்சலாக ஒலி வருவதால், அதை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, மின்சக்கர இயந்திரத்தின் வடிவமைப்பை மண்பாண்ட தொழில் செய்வதற்கு ஏற்ப மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்