காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
காளஹஸ்தி சிவன் கோயிலில் பக்தருக்கு முன்னுரிமை கொடுப்பதை குறிக்கும் வகையில் நேற்று பக்த கண்ணப்பர் கொடியேற்றத்துடன் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கியது. முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாருடன் பஞ்சமூர்த்திகள் பக்தகன்னப்பர் உற்சவமூர்த்திகளுக்கு பட்டு வஸ்திரங்களாலும், கஜமாலைகளாலும் அலங்கார மண்டபத்தில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, ராஜேஷ் குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், பக்தகன்னப்பர் உற்சவமூர்த்தி ஒரு பல்லக்கில் வைக்கப்பட்டார். தொடர்ந்து (கைலாசகிரி மலைத்தொடரில்) கோயில் அருகில் உள்ள பக்தகன்னப்பர் மலையில் உள்ள கண்ணப்பர் கோயிலுக்கு மேள தாளங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க பல்லக்கில் ஊர்வலமாக கொண்டுச் செல்லப்பட்டனர். அங்கு இருக்கும் கொடிக் மரம் அருகில் சிறப்பு பூஜை செய்தனர். அர்த்தகிரி, சம்மந்தம் மற்றும் வரதா குருக்கள் தலைமையில் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பூசாரிகள் முக்கோடி தேவர்களையும் மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தில் கலந்து கொள்ள வேண்டினர். (அழைப்பு விடுத்தனர்). பின்னர் கோயில் வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கண்ணப்பர் கொடி யேற்றப்பட்டதை தொடர்ந்து தீப தூப நெய்வேத்தியங்கள் சமர்ப்பித்தனர் . பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.