பிரயாக்ராஜ்; "பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் இன்று 1.28 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்களும், நேற்று வரை 59.31 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்களும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
உபி.,யின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்பமேளா நிகழ்வு ஜன., 13ல் துவங்கியது. வரும் 26 வரை இந்த நிகழ்வு நடக்கவுள்ள நிலையில், இன்று 1.28 கோடிக்கும் அதிகமான பக்தர்களும், இதுவரை 60 கோடிக்கும் அதிகமான பக்தர்களும் புனித நீராடி உள்ளனர். தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.
இது குறித்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில்; "பிரயாக்ராஜ் மகா கும்பமேளா உத்தரபிரதேசத்தின் ஆற்றலைப் புரிந்துகொள்ள போதுமானது. ஜனவரி 13 முதல் பிப்ரவரி 22 வரை, 60 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். உலகம் முழுவதும் மகா கும்பமேளாவின் சக்தியைப் புகழ்ந்து வருகிறது. வளர்ச்சியை விரும்பாதவர்கள், நமது நாட்டின் மற்றும் நமது மாநிலத்தின் ஆற்றலை விரும்பாதவர்கள், எதிர்மறையான கருத்துக்களைச் சொல்லி (மகா கும்பமேளாவை) அவதூறு செய்ய தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். நல்ல வேலைகள் குறித்து கேள்வி எழுப்பி, நல்ல முயற்சிகளின் பாதையில் தடையாகச் செயல்படும் எதிரிகளுக்கு பிரயாக்ராஜ் மகா கும்பமேளா ஒரு கண்ணாடியாக உள்ளது. இவ்வாறு கூறினார்.