பழமையான பைக்கில் 3,000 கி.மீ., பயணித்து கும்பமேளாவிற்கு சென்ற தந்தை, மகன்



உடுப்பி; உடுப்பியை சேர்ந்த தந்தையும், மகனும் 25 ஆண்டுகள் பழமையான ‘ஹீரோ ஹோண்டா’ பைக்கில் மஹா கும்பமேளாவுக்கு சென்று வந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில், ஜன., 26 முதல் மஹா கும்பமேளா நடந்து வருகிறது. இதில் புனித நீராட நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சென்று வருகின்றனர். இதுவரை 55 கோடி பேர் இங்கு புனித நீராடி உள்ளதாக கூறப்படுகிறது.


3,000 கி.மீ.,; கர்நாடகாவின் உடுப்பி மாவட்டம், கபுவின் கட்டபடியை சேர்ந்தவர் ராஜேந்திர ஷெனாய், 52. இவரது மகன் பிரஜ்வல் ஷெனாய், 25. இருவரும் தங்களின் 25 ஆண்டு பழமையான ஹீரோ ஹோண்டா பைக்கில், பிரயாக்ராஜ் செல்ல திட்டமிட்டனர். கடந்த 6ம் தேதி அதிகாலை, வீட்டில் இருந்து புறப்பட்ட தந்தையும், மகனும், எல்லாபூர், ஹூப்பள்ளி, விஜயபுரா, சோலாபூர், லத்துார், நந்தன், நாக்பூர், ஜபல்பூர் வழியாக 3,000 கி.மீ., பயணித்து, பிப்., 10ல் பிரயாக்ராஜ் சென்றடைந்தனர். அங்கு புனித நீராடிய பின், அன்றைய தினமே புறப்பட்டு அதே வழித்தடத்தில், பிப்., 13ல் உடுப்பி வந்தடைந்தனர். வழியில் பெட்ரோல் பங்குகளில் இரவு உறங்கி, மறுநாள் காலை மீண்டும் தங்கள் பயணத்தை தொடர்ந்து உள்ளனர்.


பிரஜ்வல் கூறியதாவது: நாங்கள் பிரயாக்ராஜ் சென்றடைவதற்கு முன்னரே, 300 கி.மீ., துாரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனாலும், இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதித்ததனர். குளிக்கும் இடத்தில் எந்தவித நெரிசலும் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆங்காங்கே தடுப்புகள் அமைத்திருந்தனர். எங்கள் பைக்கை பார்த்த மக்கள் பலரும், எங்களிடம் வந்து பேசிவிட்டு சென்றனர். மத்திய பிரதேச மாநிலம், சோய்னிக்கு செல்லும் வழியில், காரில் வந்த குந்தாபூரை சேர்ந்தவர், எங்களை நிறுத்தி, இனிப்பு, குளிர்பானம், பழங்கள் கொடுத்ததுடன், விலை உயர்ந்த கூலிங் கிளாஸ் கொடுத்து விட்டு சென்றார். இவ்வாறு அவர் கூறினார். தந்தை ராஜேந்திர ஷெனாய் கூறுகையில், ‘‘144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும், மஹா கும்ப மேளாவுக்கு என் மகனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களின் நான்கு நாள் பயணத்துக்கு, 20,000 ரூபாய் செலவானது. எங்களை பார்த்த குந்தாபுராவை சேர்ந்தவர், எங்களுக்கு புதிய ஹெல்மெட் ஒன்றும் வாங்கி கொடுத்தார்,’’ என்றார். 


ராஜேந்திர ஷெனாயின் மனைவி ரஜனி கூறுகையில், ‘‘எங்களிடம் கார் இருந்தும், தந்தையும், மகனும் இரு சக்கர வாகனத்தில் தான் சென்று வருகின்றனர். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என் சேமிப்பு மூலம் கிடைத்த பணத்தை, அவர்களின் பயணத்துக்கு கொடுத்து அனுப்பினேன். மஹா கும்பமேளாவுக்கு இருவரும் சென்று வந்துள்ளனர். அதுவே எனக்கு போதும்,’’ என்றார்.


சிகரத்தில் கன்னட கொடி; தந்தை, மகனுக்கு இதுவே முதல் பயணம் அல்ல. கடந்தாண்டு ஜூனில் இருவரும் இதே இருசக்கர வாகனத்தில், உலகின் இரண்டாவது உயரமான மலையான கார்துங்க் லாவுக்கு சென்றுள்ளனர். ஜூனில் இரு சக்கர வாகனத்தில், ஹரியானா, பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லே – லடாக், கார்கில், மனாலி வழியாக கார்துங்க் லா சென்றனர். 10 நாட்களில் 2,100 கி.மீ., கடந்தனர். கடல் மட்டத்தில் இருந்து 17,982 அடி சிகரமான கார்துங்க் லாவில், கன்னட கொடியை பறக்க விட்டனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்