அர்ஜுனன் பிரதிஷ்டை செய்த சென்ன கேசவ சுவாமி கோவில்



தமிழகம் போன்று கர்நாடகாவிலும் அதிகளவில் கோவில்கள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பெங்களூரு நகரில் இருந்து தமிழகம் செல்லும் பாதையில் ஆனேக்கல்லில் அமைந்து உள்ளது பூ நீல சமேத சென்ன கேசவ சுவாமி கோவில். இக்கோவில் கடல் மட்டத்தில் இருந்து 915 மீட்டர் உயரத்தில் உள்ளது. இக்கோவிலின் கட்டட கலை, விஜயநகர பேரரசு ஆட்சி காலத்திய பாணியில் அமைந்து உள்ளது. கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இக்கோவிலின் மகாதுவாரம் தெற்கு நோக்கி உள்ளது. கோவில் சுவரில் விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கின்றார். மைசூரு தொல்பொருள் சங்கத்தின் கூற்றுப்படி, இங்குள்ள விக்ரஹம், பாண்டவ மன்னர்களில் ஒருவரான அர்ஜுனனால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது.


நான்கு துாண்களில் பகவத் கீதை, ராமாயணம், தசாவதாரம் போன்ற பல்வேறு புராணங்கள், இதிகாசங்களின் கதைகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. யோக நரசிம்மர், வராஹ, கருடன், ஹனுமன், காமதேனு, கூர்மர், பலராமர், வாமனர் என விஷ்ணுவின் பிற அவதாரங்கள், கஜேந்திர மோக் ஷம், வாலி, சுக்ரீவன் சண்டையிடும் கதைகளும் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. கோவிலின் வரலாற்று சான்றுகள் முழுமையாக கிடைக்கப் பெறவில்லை. இருந்தாலும் கோவிலின் தோற்றம் பழமையானதாக காணப்படுகிறது. கோவில் அருகில் விநாயகர் சன்னிதியும், பிரம்மராம்பிகா சன்னிதியும் உள்ளன. இக்கோவிலை, பிஜப்பூர் ராஜ வம்சத்தில் ஜெனரலாக இருந்த சிக்க திம்மேகவுடா, 1603ல் நிறுவி உள்ளார். அன்று முதல் அவரின் குடும்பத்தினர் கோவிலை பராமரித்து வருகின்றனர். அவரின் ஆட்சி காலத்துக்கு பின், மைசூரு மன்னர் வம்சத்தினர், இப்பகுதியை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர். அதன் பின், ஹைதர் அலி காலத்தில் மைசூருடன் இணைக்கப்பட்டது. தற்போது கர்நாடக அரசின் ஹிந்து அறநிலைய துறை நிர்வகித்து வருகிறது. இக்கோவிலில் உள்ள இரு பெரிய குளங்களை, அந்த காலத்தின் விஜயநகர் பேரரசு காலத்தில் உள்ளது போன்று வடிவமைத்து உள்ளனர். – நமது நிருபர் –


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்