உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை நிகழ்ச்சிகள் நடந்தன. உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 1ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல், மாவிளக்கு, முளைப்பாலிகை ஊர்வலம் என உற்சவ நிகழ்ச்சிகள் நடந்தன. தினமும் அம்மன், காமதேனு, யானை, ரிஷபம், அன்ன வாகனம், சிம்ம வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். திருவிழாவில், கடந்த, 16ம் தேதி, திருக்கல்யாண உற்சவமும், நேற்று காலை, 6:15 மணிக்கு, சூலத்தேவருடன், மகா சக்தி மாரியம்மன் தம்பதி சமேதரராக, அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட திருத்தேரில் எழுந்தருளினார். மாலை, பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இன்று காலை, அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால், அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. காலை, 8:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து மாலை, 4:00 மணிக்கு, ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை, அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளல் மற்றும் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. நாளை காலை, 10:30க்கு, கொடியிறக்கம், 11:00 மணிக்கு, மகா அபிஷேகம், பகல், 12:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு, மாலை, 7:00 மணிக்கு, புஷ்ப பல்லக்கில் எழுதருளல் நிகழ்ச்சியுடன், தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.