பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 13ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, பல்வேறு உற்சவங்களும், உற்சவ பெருமான் வீதியுலாவும் நடைபெற்றன.
விழாவின், 7ம் நாளான இன்று காலை 7:00 மணிக்கு, தேர் திருவிழா விமரிசையாக நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் கோவிலில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் புறப்பட்ட உற்சவ பெருமான், தேரடி தெருவில் உள்ள தேரின் நிலையை அடைந்தார். வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த 43 அடி உயர மரத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் கரிகிருஷ்ண பெருமாள் வீற்றிருந்தார். பக்தர்கள் பக்தி பரவசத்துடன், நிலையில் இருந்து புறப்பட்ட தேர், புதிய தேரடி தெரு, தாயுமான் தெரு, நீலியப்பாதுரை தெரு, தண்டபாணி தெரு, செங்குன்றம் சாலை, அரிஅரன் பஜார் வீதி என, மாடவீதிகள் வழியாக வலம் வந்தது. மங்கள வாத்தியங்கள், செண்டைமேளம் முழங்க, பக்தர்கள் ஆரவாரத்துடன் தேரின் வடம் பிடித்து இழுத்து சென்றனர். மாடவீதிகளில் காத்திருந்த பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா’ எனக்கோஷம் எழுப்பி நெஞ்சுருக பெருமாளை வணங்கினர். தேரோட்டத்தின்போது தன்னார்வலர்கள், வியாபாரிகள் பக்தர்களுக்கு குளிர்பானம், மோர், உணவுகளை வழங்கினர். மாலை 5:00 மணிக்கு தேர் நிலைக்கு திரும்பியது. பொன்னேரி போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.