திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ விழா, கடந்த, 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் உத்சவ முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன், ஒவ்வொரு வாகனத்திலும் காலை, மாலை என இரு வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு, உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் மரத்தேரில் எழுந்தருளி தேர்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, மாலை 6:00 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் யாளி வாகனத்திலும், தொடர்ந்து குதிரை வாகனத்திலும் வலம் வந்தார். பின் இரவு, 9:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமானுக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடந்தது.