ராமநாதபுரம் சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம்



ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் உள்ள மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயிலில் நடந்த சித்திரை திருவிழாவில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது.


ராமநாதபுரம் மீனாட்சி சமேத சொக்கநாதர் சுவாமி கோயில் மிகவும் பழைமையானது. இவ்வாண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்.,29 ல் கொடியேற்றம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே 6ல் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. மே 7ல் திக் விஜயம், அம்மன் உலா நடந்தது. நேற்று ( மே 8 ல்) மீனாட்சி சொக்கநாதர் சுவாமிக்கு காலை 10:50மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் சுவாமி பிரியாவிடையுடன் அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (மே 9ல்) தீர்த்தவாரி, பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி திருவீதி உலாவுடன் சித்திரை திருவிழா முடிவடைகிறது. இதே போன்று பட்டணம்காத்தான் சேதுபதி நகரில் கலெக்டர் அலுவலக வளாகம் நீச்சல் குளம் அருகேயுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அம்மன், சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. பட்டணம்காத்தான் வீர விஜய விநாயகர் கோயிலில் மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


ராமநாதபுரம் வெளிபட்டணம் முத்துராமலிங்க சுவாமி கோயிலில் சுவாமி, பர்வதமர்த்தினி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரத்தில் திருக்கல்யாணம் நடந்தது. சித்தார் கோட்டை வடகரை பாலமுருகன் கோயில் வளாகத்தில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சுவாமி, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


* பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், விசாலாட்சி அம்பிகா, சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்)கோயில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழா ஏப்.,30ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது.


தினமும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. மே 7 கமல வாகனத்தில் தபசு திருக்கோலத்தில் அம்பாள் வலம் வந்தார். நேற்று காலை 10:00 மணிக்கு சந்திரசேகர சுவாமி பிரியாவிடையுடன் மாப்பிள்ளை திருக்கோலத்தில் உலா வந்தார். பின்னர் கோயில் முன்பு மாப்பிள்ளை வரவேற்பு நிகழ்ச்சி, திருக்கல்யாண மண்டபத்தில் கன்னிகாதானம் உள்ளிட்ட விவாக சடங்குகள் நடந்தது. காலை 10:55 மணிக்கு விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமிக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பெண் பக்தர்கள் தங்களது மாங்கல்யத்தை மாற்றி கட்டிக் கொண்டனர். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பல்வேறு அமைப்பினர் சார்பில் காலை முதல் மதியம் வரை அன்னதானம் நடந்தது. இரவு சந்திரசேகர சுவாமி பிரியாவிடையுடன் யானை வாகனத்திலும், விசாலாட்சி அம்மன் பூப் பல்லக்கிலும் வீதி உலா வந்தனர். இன்று காலை 9:00 மணி முதல் சித்திரை தேரோட்டம் ரத வீதிகளில் நடக்கிறது. நாளை காலை தீர்த்தவாரி, இரவு கொடி இறக்கம், மறுநாள் உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடையும். 


*கீழக்கரை சொக்கநாதர் கோயில் தெருவில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நேற்று திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. முன்னதாக மூலவர் மீனாட்சி சொக்கநாதர், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சல் மண்டபத்தில் உற்ஸவ மூர்த்திகளான சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மனுக்கு காலை 10:30 மணிக்கு மிதுன லக்கனத்தில் மங்கள நாண் சூட்டும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு பள்ளியறை பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்