கோவில் சுவரில் காசு ஒட்டினால் நினைத்தது நிறைவேறும்



பெங்களூரில் இருந்து 45 கி.மீ., தொலைவில், நெலமங்களாவின் என்டகானஹள்ளியில் பெங்களூரு – மங்களூரு மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் கூபே கள்ளம்மா தேவி கோவில் அமைந்து உள்ளது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன், இவ்வழியாக வணிகம் செய்ய சென்றவர்கள், தங்கள் தொழில் விரிவடைய, இங்கு ஆதிலட்சுமி தேவியை பிரதிஷ்டை செய்தனர். ஆதிலட்சுமியின் வாகனம் ஆந்தையாகும். எனவே, ஆதிலட்சுமியை கூபே கள்ளம்மா தேவி என்று அழைக்கின்றனர்.

சாலை ஓரத்தில் உள்ள மரத்தின் அடியில் அமைந்திருந்த அம்மன் சிலை இருந்து. சில ஆண்டுகளுக்கு முன், மங்களூரு – பெங்களூரு நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் திட்டமிட்டனர். அதற்காக கோவிலை இடிக்க முற்பட்டனர். அப்போது, அங்கு பாம்பு தோன்றியது. இதை பார்த்த அதிகாரிகள், இடிக்கும் பணியை நிறுத்தினர். அப்போது இக்குழுவில் இருந்த இன்ஜினியருக்கு திடீரென கண் பார்வை மங்களானது. அதிர்ச்சி அடைந்த அவர், தேவியை மனமுருகி வேண்டி கொண்டார். இதையடுத்து மீண்டும் அவருக்கு கண் பார்வை கிடைத்தது.

இதை தொடர்ந்து, என்டகானஹள்ளி கிராம மக்களை சந்தித்து, நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் குறித்தும், கோவிலை தள்ளி வைப்பது குறித்தும் விளக்கினர். கிராமத்தினரும் அதிகாரிகளின் யோசனையை ஏற்றுக் கொண்டனர். பின், பல அர்ச்சகர்களை சந்தித்து, கோவிலை தள்ளி வைக்கும்படி கேட்டு கொண்டோம். அதன்படி, கோவில் தள்ளி வைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அக்கம் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்களில் இருந்து 16 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.

அம்மனின் சக்தியை உணர்ந்த இன்ஜினியர், கோவிலுக்கென தனி சமுதாய பவன் கட்டி கொடுத்தார். ஏழைகள் தங்கள் பிள்ளைகளுக்கு இங்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கின்றனர். இதுபோன்று அம்மன் சிலை இருந்த மரத்தின் இலைகளை நான்கு இளைஞர்கள் பறித்தனர். பறித்த சில நிமிடங்களில், நான்கு இளைஞர்களுக்கும் கண் பார்வை மங்கலானது. பின், அவரது குடும்பத்தினரும், அவர்களும் அம்மனை மனமுருகி வேண்டி கொண்டனர். பின் மீண்டும் கண்பார்வை கிடைத்தது.

இக்கோவிலில் நாம் மனமுருகி வேண்டி கொண்டு, சுவரில் காசை ஒட்டினால், அது நிறைவேறும். இல்லையெனில் நிறைவேறாது என்று கூறப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, காசு ஒட்டிய பலரும் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதாக, கோவில் அர்ச்சகரிடம் தெரிவித்து உள்ளனர். அத்துடன், குழந்தை பேறு வேண்டியும், திருமண தடை நீங்கவும் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். காசு மட்டுமல்ல, உருளு சேவையும் பக்தர்கள் செய்கின்றனர்.

தினமும் காலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை கோவில் திறந்திருக்கும். இக்கோவிலை தொடர்பு கொள்ள மொபைல் போன் வசதி இல்லை. நெலமங்களா பஸ் நிலையத்தில் இருந்து கரேகள்ளு சுங்கச்சாவடியை கடந்தால், 1 கி.மீ., தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து பஸ்சில் செல்வோர், நெலமங்களா பஸ் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள கரேகள்ளு கிராம சுங்கச்சாவடிக்கு செல்லலாம். அங்கிருந்து 1 கி.மீ., தொலைவில் இடது புறத்தில் கோவில் அமைந்து உள்ளது.

பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து 256 எம், 258, 258 ஏ, 258 ஏபி, 258 பிஎன், 258 சி, 258 சிசி, 258 டி, 258 இ, 258 எப், 258 ஜி, 258 ஜே, 258 கேஏ, 258 எல், 406, வி258 சி, வி335இஎன் பஸ்களும்; சிவாஜி நகர் பஸ் நிலையத்தில் இருந்து 255 கே, 258 என் பஸ்களும் இயக்கப்படுகின்றன.

வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்