பக்தர்களை பரவசமடைய செய்யும் விஸ்வசாந்தி விஜய விட்டலா



பெங்களூரு; நெலமங்களா தாலுகா அரிஷின குண்டே கிராமத்தில் விஸ்வசாந்தி ஆசிரமம் அமைந்து உள்ளது. இந்த ஆசிரமத்தில் அமைந்துள்ள தெய்வீக தலம் தான் விஸ்வசாந்தி விஜய விட்டலா ஆலயம். ‘இதை தட்சிண பண்டாரி’ என்றும் அழைக்கின்றனர்.


பிரமாண்டம்; இங்கு, விஷ்ணுவின் அவதாரமான விஜய விட்டலாவின் 36 அடி பிம்மாண்ட திருஉருவ சிலை உள்ளது. இந்த சிலை கலையாகவும், கம்பீரமாகவும் காட்சி அளிக்கிறது. இதை பார்ப்பவர் மெய் மறந்து போவர். சிலையின் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் மூலம் ஏறி சென்று விட்டலாவிற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. கருப்பு நிற விட்டலா சிலைக்கு பாலில் அபிஷேகம் செய்யும்போது, பார்ப்போர் பரவசம் அடைவது உறுதி. விட்டலா சிலையின் எதிர்ப்புறம் 20 அடி உயரத்தில் குத்து விளக்கு வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு அருகில் விஷ்ணுவின் கூர்ம அவதாரமான ஆமையின் மீது, கலை நயம் மிகுந்த துளசி மாடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மாடத்தில் சிங்கம், நாகம், தேவி சிலைகள் செதுக்கப்பட்டு உள்ளன. சிலைகளின் வேலைப்பாடுகள் அருமையாக உள்ளன.


கம்பீரம்; சிலையின் அடிவாரத்தில் லட்சுமி நாராயணன் சன்னிதி உள்ளது. உற்சவ மூர்த்திகளாக லட்சுமியும், நாராயணனும் அழகிய ஆபரணங்கள், துளசி, மலர் மாலைகள் அணிந்து காட்சி அளிக்கின்றனர். கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். ஸ்ரீ பிரசன்ன துர்கா தேவிக்கு தனி சன்னிதி உள்ளது. துர்கா தேவி எட்டு கைகளில் ஆயுதங்களுடன், சிங்கத்தின் மீது அமர்ந்து கொண்டு கம்பீரமாக காட்சி அளிக்கிறார். இதுமட்டுமின்றி ஆதி லட்சுமி, சந்தான லட்சுமி, கஜலட்சுமி, தனலட்சுமி, தான்யலட்சுமி, வித்யா வீணை லட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி, வீரலட்சுமி என அஷ்ட லட்சுமிகளும் உள்ளனர். கங்கா, யமுனா, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவிரி ஆகிய ஏழு நதிகளை ஒரே இடத்தில் சங்கமிக்கும் வகையில், ஏழு கன்னிகைகளின் சிலைகள் செதுக்கப்பட்டு உள்ளன.


சிற்பி கைவண்ணம்; ஸ்ரீ பிரம்ம ரூபி காயத்ரிதேவிக்கு தனி சன்னிதி அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு தாமரை மீது அமர்ந்த கோலத்தில் பத்து அடி உயரமுள்ள தேவியின் சிலை உள்ளது. ஐந்து முகங்கள் பத்து கரங்களுடன் கம்பீரமாக காயத்ரி தேவி காட்சி அளிக்கிறார். இந்த பெரிய விக்ரஹத்திற்கு முன்னால் பளிங்கு கற்களால் ஆன, சிறிய அளவிலான காயத்ரி தேவி விக்ரஹம் உள்ளது. மஹாபாரத குருஷேத்ர போரில் ரதத்தில் அமர்ந்து கொண்டு, பகவான் கிருஷ்ணர், அர்ஜுனருக்கு உபதேசம் வழங்கும் காட்சி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதை ஷிவமொக்காவை சேர்ந்த காசிநாத் எனும் சிற்பி வடிவமைத்து உள்ளார். மேலும், கிருஷ்ணர் அர்ஜுனருக்கு வெளிப்படுத்திய விஸ்வரூப காட்சியின் திருஉருவ சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலைக்காக தனி மண்டபமே உருவாக்கப்பட்டு உள்ளது. விஸ்வரூப தரிசனத்தில், ஏழு தலை நாகம், 15 முகங்களுடன், 24 கைகளுடன், கைகளில் சங்கு சக்கரம், கதாயுதம் போன்ற பல ஆயுதங்களுடன் கிருஷ்ண பகவான் காட்சி அளிக்கிறார். இதை சுற்றியுள்ள சுவர்களில் கீதா உபதேசம், கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பொறிக்கப்பட்டு உள்ளது. பிரமிக்க வைக்கும் விஸ்வரூப சிலையும், கீதா உபதேசங்களும் பார்ப்போரை மெய் மறக்கவைக்கிறது. இந்த வளாகத்தில் தாவரவியல் பூங்காவும் உள்ளது. குடும்பத்துடன் ஓய்வெடுக்க இடமும் உள்ளது. இப்படி திரும்பும் பக்கம் எல்லாம் தெய்வங்களாக காட்சி அளிக்கிறது விஸ்வசாந்தி விஜய விட்டலா ஆலயம். –நமது நிருபர் –


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்