அனுப்பர்பாளையம்; திருப்பூர் அடுத்த 3 - செட்டி பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவில் புணரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, கோவில் திருக்குட நன்னீராட்டு பெரு விழா வருகிற 7 ம் தேதி திங்கட்கிழமை காலை 9:15 மணிக்கு மேல் 10:15 மணிக்குள் நடைப்பெறுகிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி, 3 ம் தேதி கிராம சாந்தி பூஜை நடக்கிறது. 4 ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிக்கு 3 - செட்டிபாளையம் வெங்கடேஸ்வரா நகர் விநாயகர் கோவிலில் இருந்து, பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வருதல், மதியம் 1:00 மணிக்கு விநாயகர், மாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு விமான கோபுர கலசங்கள் பிரதிஷ்டை செய்தல், மாலை 3:00 மணிக்கு திருமுருகன்பூண்டி திருமுருகநாத கோவிலில் இருந்து, தீர்த்த குடம் எடுத்து வருதல். இரவு 9:00 மணிக்கு பவளக்கொடி கும்மியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. 5 ம் தேதி சனிக்கிழமை இரவு 9:00 மணிக்கு வள்ளி ஒயில் கும்மியாட்டம் நடக்கிறது. 6 ம் தேதி ஞாயிற்றுகிழமை இரவு 9:00 மணிக்கு பெருஞ்சலங்கையாட்டம் மற்றும் காராளன் கம்பத்தாட்டம் நடைப்பெறுகிறது. 7 ம் தேதி திங்கட்கிழமை காலை கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 5:00 மணிக்கு மாகாளியம்மன் சிம்ம வாகனத்தில் திரு வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைப்பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வளர்மதி மற்றும் ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர்.