ஸ்ரீராமபுரம்; பாஷ்யம் நகர் முருகன் கோவிலில், வரும் 25ம் தேதி சுமங்கலி பூஜை நடக்க உள்ளது. பெங்களூரு, ஸ்ரீராமபுரம் பாஷ்யம்நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் கேட்ட வரம் அருளும் தெய்வமாக, துர்க்கை அம்மன் உள்ளார். இங்கு நடக்கும் ராகு கால பூஜை சிறப்பு வாய்ந்தது. ‘ராகு கால பூஜை பக்தாதிகள்’ இணைந்து, வரும் 25ம் தேதி காலை 10:30 மணிக்கு சுமங்கலி பூஜை நடத்துகின்றனர். சிறப்பு அபிஷேகத்திற்கு பின், அம்மன் அலங்கரிக்கப்பட்டு, பூஜை நடக்க உள்ளது. கணவர் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ பெண்கள் மனம் உருகி அம்மனை வேண்டுவர். திருமணம் ஆகாத பெண்களுக்கு, நல்ல திருமண வரன் அமைய வேண்டியும், குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பேறு கிடைக்க வேண்டியும், பூஜை செய்வர். பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம், வளையல், கண்ணாடி, சீப்பு, பூ, திருமாங்கல்ய கயிறு, பூஜையில் வைக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம், மெஹந்தி கோன், பிரசாதம் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை குழுவின் உஷா, பத்மா, ராஜேஸ்வரி, சாந்தி, லட்சுமி, தேவிகா, மகேஸ்வரி, ஜெயந்தி, சம்பத்தம்மாள், மீரா மற்றும் பலர் செய்துள்ளனர்.