மேட்டுப்பாளையம்; ஆடி அமாவாசை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மன் சுவாமியை வழிபட்டனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில். இங்கு ஆடி அமாவாசை முன்னிட்டு இன்று அதிகாலை, 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அம்மன் சுவாமிக்கு அபிஷேகமும், அலங்காரமும் செய்து, பூஜை செய்தனர். அதன் பின்பு பக்தர்கள் வழிபாட்டிற்கு விட்டனர். பக்தர்கள் அதிகாலை முதலே, நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மன் சுவாமியை வழிபட்டனர். பெரும்பாலான பெண் பக்தர்கள் கோவில் கொடி மரத்தின் முன் தீபம் ஏற்றி வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.