திருப்போரூர்; பள்ளத்தண்டலம் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, இன்று கோலாகலமாக நடந்தது. திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சியில் அடங்கிய பள்ளத்தண்டலம் கிராமத்தில், கெங்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில், கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. முன்னதாக, கடந்த 9ம் தேதி, விநாயகர் வழிபாடுடன் விழா துவங்கியது. இரவு முதல் கால வேள்வி பூஜை நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால பூஜைகளும், இரவு மூன்றாம் கால பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து, இன்று காலை 9:00 மணிக்கு நான்காம் காலை பூஜையும், 9:30 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடும் நடந்தன. அதைதொடர்ந்து, காலை 10:00 மணிக்கு, விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், ‘ட்ரோன்’ மூலமாக பூக்கள் மற்றும் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதையடுத்து மஹா அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.