திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மலைமேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று நடந்தது.
இன்று காலை அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம் தலையில் பால்குடம் சுமந்து மலை மேல் செல்வதற்காக கோயில் கருப்பசாமியை வழிபட்டு புறப்பட்டார். கோயிலுக்குள் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி மலைமேல் பால்குடம் கொண்டு செல்லும் புதிய பழக்கத்தை உருவாக்காதீர்கள். சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பால்குடத்தை செலுத்துங்கள் என்றனர். அதற்கு ராமலிங்கம், மலையின் அடிவாரத்தில் மூலவர் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அபிஷேகங்கள் அனைத்தும் அவரது கரத்திலுள்ள தங்கவேலுக்கு தான் நடக்கிறது. அந்த வேல் மலை மேல் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சுனை தீர்த்தத்தில் பாலாபிஷேகம் நடக்கிறது. அதற்காகத்தான் நான் 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு நான் மட்டும் பால் குடம் எடுத்து செல்கிறேன் என்றார். போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன், இன்ஸ்பெக்டர் மதுரை வீரன், மலை மேல் பால்குடம் கொண்டு செல்வது என்றால் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று செல்லுங்கள். பால்குடம் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது. பால் குடத்தை பையில் வைத்து கொண்டு செல்லுங்கள் என கூறினர். போலீசரின் அறிவுரையை ஏற்று ராமலிங்கம் பால்குடத்தை பையில் வைத்து மலை மேல் கொண்டு சென்று நேர்த்தி கடனை செலுத்தினார். அவருக்கும், பால் குடத்திற்கும் போலீசார் பாதுகாப்பாக சென்றனர்.